Thursday, July 2, 2020

மரம் - ஜீ. முருகன் - வாசிப்பு குறிப்பு

ஜீ. முருகனின் 'கண்ணாடி' தொகுப்பில் சில கதைகள் வாசித்திருக்கிறேன். பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய 'மரம்' நாவல் வாசித்து முடித்தேன். நாவலின் களம் சிவகிரியாக உருமாற்றம் அடைந்துள்ள திருவண்ணாமலை. அங்கு பல வருடங்களாக தொடர்ந்து சென்று வருபவன் என்பதால் அவர் காட்டக்கூடிய சில இடங்களை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. கிரி, அவனுடைய அம்மா கவிஞர் சந்திரா, அவருடைய கணவர் கண்ணன், மகள் திவ்யா என ஒரு குடும்பம். இந்த குடும்பத்துடன் தொடர்புடைய கிரியின் நண்பன் ரவி, ரவியின் நண்பனாக வந்து சேரும் சிவன் எனும் ஓவியன், அவனை ரவிக்கு அறிமுகம் செய்த இடதுசாரி இயக்க தோழர் பாலு. ரவியின் வீட்டில் கீழ் பகுதியில் வசிக்கும் தேவகி. இவர்களெல்லோரும் சுற்றிவரும் மையமான கோபாலர் எனும் மறைந்துபோன துறவி. 

கோபாலர் மரத்தில் ஐக்கியமாகிவிட்டார் என ஒரு மரத்தை சுற்றி ஆசிரமத்தை கட்டி எழுப்புகிறார்கள அவருடைய சீடர்கள். கோபாலர் ஒரு சாயலில் யோகி ராம் சுரத் குமார் மாதிரியும் இன்னொரு சாயலில் ரமணரையும் நினைவுபடுத்துகிறார். மனிதன் ஒரு மரம் போல வாழ்ந்து தழைத்து பெருகி மட்கி உரமாக மறைய வேண்டும் என்பதே அவருடைய போதனை. நாவல் இந்த லட்சியத்தையே முன்வைக்கிறது. இதை அடையமுடியாத தவிப்பை பதிவாக்கி, எது இதற்கு தடையாகிறது என கேட்கிறது. இங்கு தான் ஓவியர் சிவனும் அவன் வரையும் குரங்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. சிவன் ஒரு கலைஞன். குற்ற உணர்விலிருந்து விடுபட்ட, மிகக் குறைந்த தேவைகள் உடைய கலை மீது பெரும் நாட்டம்கொண்ட நாடோடி கலைஞன். அவன் குரங்குகளை விதம் விதமாக வரைகிறான். தூய ஆதி மனிதனை உருவாக்கிவிட முடியுமா எனும் வேட்கை கொண்டவன். குரங்கு மனிதமனத்தின் பகுத்தறிவற்ற (irrational) பகுதிக்கு குறியீடாகிறது. சிவன் குரங்குகளுடன் நெருங்கி பழகுகிறான் அவற்றுடன அவனால் உரையாட முடிகிறது. கலைஞன் என்பவனே தனக்குள் இருக்கும் குரங்குடன் உரையாட முடிந்த, பேண முடிந்தவன் தான் என தோன்றியது. சிவன் ஒரு லட்சியவாத கலையாளுமை. கோபாலருடன் அவன் மானசீகமாக உரையாடுகிறான். தன்னுடைய இலக்கு கோபாலருடைய அதே இலக்குதான் ஆனால் தான் அதை அடைவதற்கு கலையை சாதனமாக கைகொண்டவன்.  

நாவலின் பிற பாத்திரங்கள் கொந்தளிக்கும் அமைதியின்மையில் உழல்பவர்கள். உள்ளடங்கிய இயல்புடையவனான கிரி சமூக மாற்றங்களுக்காக சிலருடன் இணைந்து பணியாற்ற சென்று ஏமாறுகிறான். தாயின் மறுபக்கத்தை கண்டு உழல்கிறான். நண்பனின் துரோகத்தை காண்கிறான், புத்தக கடைக்காரன் வழியாக காவலர்களிடம் சிக்கி கொள்கிறான். வெறுப்பு ஏமாற்றம் என தற்கொலையில் சென்று முடிகிறது அவனுடைய பாதை. மரணத்திற்கு பின் அவனுடைய மறுபக்கத்தை தங்கை அவனுடைய கணினியை ஆராய்ந்து அறிந்து அதிர்ச்சி அடைகிறாள்.  ரவி நண்பனின் தாயுடனும், கீழ் வீட்டு தேவகியுடனும் உறவில் இருக்கிறான் ஆனால் கடும் நிறைவின்மையை  உணர்கிறான். சந்திராவின் அலைகழிப்புகள் அவளை துன்புறுத்துகின்றன. கண்ணனுக்கு சிவனின் ஓவியத்தில் இருக்கும் குரங்கு பெண் தன்னுடைய மனைவி என்பது உறைக்கும்போது பெரும் அதிர்ச்சி. அதை ஏற்க முடியாமல் தவிக்கிறான். ரயில் நிலையத்தில் அவன் தன்னை பரிசீலனை செய்து மீள்கிறான். இவர்கள் எல்லோருடைய சிக்கலும் இவர்கள் ஒழுக்கம் எனும் ஈர கம்பளியை போர்த்தியவர்கள் என்பதுதான்..அதை துறக்க முடியாமல் சுமந்து அலைபவர்கள். அவர்களால சிவனாகவோ கோபாலராகவோ ஆகமுடியாது  என்பதால் அவர்களுக்கு மீட்சியில்லை. 

நாவலின் சிக்கல் என்பது இவையாவும் அறிவார்ந்த வகையில் மட்டுமே வெளிப்படுகிறது. கதை மாந்தர்களின் கொந்தளிப்பை நமது நாடியில் உணர முடியவில்லை. ஒருவித விலக்கத்துடனேயே உணர்கிறோம். ஆகவே  ஒருவித இயல்பற்ற தன்மை குடிகொண்டுவிடுகிறது. மற்றுமொரு முக்கிய சிக்கல் நாவலின் மொழி மிகவும் அசுவாரசியமற்று தட்டையாகவே நகர்கிறது. சில பிரமாதமான இடங்கள் கூட சோகையான மொழியால் எவ்வித தாக்கமும் இன்றி நம்மால் கடந்துவிட முடிகிறது. 

கிரியின் காமக்கதைகள் அவனுக்குள் இருந்த இன்செஸ்ட் விழைவை பேசுகிறது. அதை தங்கை குறுகுறுப்புடன் வாசிக்கிறாள். கிரியின் உள்வெளிக்கும் புற நடத்தைக்கும் இடையிலான முரண் அவளை தொந்திரவிற்கு உள்ளாக்குகிறது. மனிதனின் ஆழ்மனத்தின் மூடியை திறந்து நோக்குவது கழிவு தொட்டியை திறப்பது போலத்தான். அங்கே எல்லாமும் நாறி கிடக்கும். மனிதனால் ஏன் குரங்கை போல் இருக்க முடியவில்லை? தளைகள் இன்றி வாழ முடியவில்லை? எல்லாவற்றையும் ஆழ்மனத்தில் அதக்கி வைத்து உயிரை விடுகிறான்? ஒருவித ஃபிராய்டிய நோக்கில் உருவாக்கப்பட்ட பாத்திரம் தான் கிரி. கோபாலர் அவர் ஐக்கியமானதாக சொல்லப்பட்ட்ட மரத்தில் தூக்கிட்டு இறந்தார் என ஒரு நம்பிக்கையை கிரி முன்வைக்கிறான். கார்ல் யுங் மனிதனின் நிழலை பற்றி சொல்கிறார். நிழல் அவனுடைய ஆழ்மனம். நிழல் மனிதனை விழுங்கும்போது அவன் அழிந்துவிடுவான். கோபாலரும் கிரியும் ஒளியாக தென்பட்டவர்கள். எத்தனைக்கு எத்தனை ஒளி மின்னுகிறதோ அத்தனைக்கு அத்தனை அதன் நிழலும் அடர்ந்து கறுத்திருக்கும். நாவலின் உச்சங்களில் ஒன்று என்பது குரங்கு கூட்டத்தின் மரணத்தை சொல்லும் அத்தியாயம். குறியீட்டு ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் முருகனின் மொழியின் காரணமாக நம்மை அந்த மரணங்கள் நிலைகுலைய செய்யவில்லை. மேலும் கதை மாந்தர்களில் சிவன், ரவி கிரி ஆகியோருக்கு இருக்கும் நம்பகத்தன்மை சந்திரா, தேவகி, திவ்யாவிற்கு கைகூடவில்லை என தோன்றியது.  

உருவகங்கள் வழியாக அறிவார்ந்த தளத்தில் நிகழும் நாவல். சிவகிரி புனிதங்களும் கசடுகளும் ஒருங்கே இருக்கும் நகரமாக நாவலின் கதை மாந்தர்களின் அகத்திற்குரிய புறமாக துலங்கி வருகிறது. அறிவார்ந்த நாவலின் சிக்கல் என்பதே வாசக மனதுடன் தொடர்புறுத்தி கொண்டு அவனுடைய உணர்வு தளத்தில் வேர்பிடித்து வளராமல் போய்விடக்கூடும் என்பதே. இதுவே இந்நாவலின் சிக்கலும் கூட. நாவலின் நோக்கத்திற்காகவும் பேச முயன்ற விஷயத்திற்காக வாசிக்க வேண்டிய நாவலாக 'மரம்' உள்ளது. 

மரம் 
ஜீ. முருகன் 
யாவரும் வெளியீடு    

3 comments:

  1. தற்கொலையென்பது இயல்பாக நாவலை முடிக்கும் வழி.டால்ஸ்டாயை வாசிப்பவன் தன் சொந்த மகளோடு உறவு கொள்கிறான் என்பதெல்லாம் பகல் கனவின் உச்சம்.

    குரங்க்கிலிருந்து வந்த மனிதனின் அணையா காமம். கலைப் பித்து குரங்கு போன்றவையெல்லாம் பொதுவான உதாரணங்கள். நாவல் அளிக்கும் மையப் படிமம் என்ன. குரங்குகளின் புகைப்படமா? குரங்குகள் உள்ள சிவகிரி மலையா? நாவல் பிராய்டியம். ரமணரின் ஆன்மீகம், என எதை நோக்கியும் செல்லவில்லை. அதைப் பற்றிய விவாதங்கள் இல்லை.

    பெண்கள் கதாபாத்திரங்களுக்கு போதுமான நம்பகத்தன்மை இல்லை. பாலியல் கொந்தளிப்புகளும். கலை, ஆன்மீகம் பற்றி மேலோட்டமான புரிதல்கொண்ட நாவலென்றே தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. தந்தை மகளுடன் உறவு கொள்வதாக கிரி தான் எண்ணுகிறான். நாவலின் மையப்படிமம் 'மரம்' தான். மற்றபடி சிறந்த நாவல் எல்லாம் இல்லை. ஒருமுறை வாசிக்கலாம்.

      Delete
  2. நான் வாசித்ததிலேயே மிக மோசமான நாவல் மரம்தான்..

    ReplyDelete