Sunday, July 12, 2020

கலையும் அறமும்



சிங்கப்பூர் - மலேசிய இலக்கிய சூழலில் சிற்றிதழ் மரபு என்பது இல்லை (அல்லது வலுவாக இல்லை). அங்கே நாளிதழ்களே எல்லாவகையான தமிழ் எழுத்திற்கும் பிரதிநிதியாகிறது. இது அங்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சாம்ராஜின் ஒரு கவிதை தமிழ் முரசில் வெளியானபோது அங்கே பலரும் அதிர்ச்சி அடைந்து கடுமையாக விமர்சித்தார்கள். நவீனின் பேய்ச்சி நாவலில் ஆபாச வார்த்தைகள் உள்ளன என முழு பக்க கட்டுரை மலேசிய நாளிதழில் வெளியாகி நாவல் தடை செய்யப்படும் அளவிற்கு சென்றது. சாம்ராஜின் கவிதை இங்கு தினமலரில் வந்தால் கூட இப்படி விமர்சிக்கப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். தமிழகத்திலும் சிற்றிதழ் மரபு தேய்ந்து வருகிறது. இது சிற்றிதழ் மரபில் பாலாறும் தேனாறும் ஓடியது என சுட்டுவதற்கு அல்ல. இப்போது சிற்றிதழ் தரப்பிலிருந்து மைய ஊடக பெயர்ச்சி நிகழும்போது மைய ஊடகத்திற்குரிய சமரச போக்கை எழுத்தாளர்கள் கடைபிடிக்க வேண்டி இருப்பது புரிந்துகொள்ள கூடியதே.  அதேசமயம் சிற்றிதழின் விழுமியங்களை நாளிதழில் இவர்களின் இடபெயர்வு கொண்டுவரும் என எதிர்பார்ப்பதும் சரியானதே. 

நேற்று கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி ஒருபக்க சிறப்பிதழை தமிழ் இந்து கொண்டு வந்திருந்தது. அதை எழுதியவர்கள் எனது மதிப்பிற்குரிய கவிஞர்கள், நண்பர்கள். இது சார்ந்து தமிழ் இந்து திசை நாளிதழ் மீதும் கட்டுரையாளர்கள் மீதும் கடும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இந்த விமர்சனங்களில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். இத்தகைய ஒரு சிறப்பிதழ் தினமலர் அல்லது தினத்தந்தியில் வந்திருந்தால் இத்தனை வருத்தத்தை எனக்கு ஏற்படுத்தி இருக்காது. சிற்றிதழ் அல்லது தீவிர இலக்கிய பரப்பிலிருந்து மைய ஊடகத்திற்கு சென்றவர்கள், தமிழின் தீவிர இலக்கியத்திற்கு (முன் தினமணி மட்டுமே கொஞ்சம் கவனம் அளித்த வந்த நிலையில்), சிறந்த தளங்களை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் எனும் வகையில் தமிழ் இந்து திசை மீது கூடுதல் எதிர்பார்ப்பும், அது நிறைவேறாத போது கூடுதல் விமர்சனமும் எழுவது இயல்பே. தமிழ் இந்து திசையின் நடுப்பக்கத்தில் செய்தியாக இல்லாமல் வலுவாக தமிழ் அறிவுஜீவிகள் வைரமுத்துவை கண்டித்து மீடூ விவகாரத்தில் முன்னர் எதுவும் எழுதியதாக நினைவில் இல்லை. சொல்லப்போனால் ஒருவித இறுகிய அமைதியுடன் அதை கடந்து சென்றார்கள். மீடூ ஒரு சாதிய விவகாரமாக, அல்லது பெண்களின் உள் விவகாரமாக மட்டும் சுருங்கி மறைந்தது. எந்த மைய ஊடகமும் கண்டித்து நடுப்பக்கத்தில் தலையங்கம் எழுதியதாக நினைவில்லை. எந்த தொலைக்காட்சி விவாதத்திலும் இது பெரிய அளவு விவாதிக்கப்பட்டதாகவும் நினைவில் இல்லை. இவையெல்லாம் நிகழ்ந்து இருந்து, அதன் பிறகு அவர் ஒரு முக்கிய கலைஞர் என கொண்டாடப்பட்டிருந்தால் (அவரை கலைஞர் என ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது வேறு விஷயம், குறைந்தபட்சம் சில நல்ல தமிழ் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் என ஒப்புக்கொள்வேன்) கூட அதை ஒருவிதமாக புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் இவை எதுவும் நிகழவில்லை. அப்போது எழுதாத நீ இப்போது எழுதுகிறாயே என கேட்கும் whattabouttery அல்ல இது. 

கலைஞனும் கலையும் வேறு. கலைஞன் மண்ணில் உழல்பவன், அவனுடைய பிழைகளுக்கு அவன் உருவாக்கிய கலையை புறக்கணிக்க வேண்டுமா என்றொரு விவாதம் எழுகிறது. கலை என்பதொரு கொடை. பெரும்பாலும் அது அவன் வழியாக திகழ்கிறது. கலைஞன் ஒரு ஊடகமாகவே அதிகமும் திகழ்கிறான் என்பதே எனது புரிதல். பல சமயங்களில் கலை வெளிப்படாத தருணங்களில் சுயநலமும் கீழ்மையும் கொந்தளிக்கும் சாமானிய மனிதனாக கலைஞன் இருக்கிறான். ஆகவே கலையையும் கலைஞனையும் தனித்து நோக்க வேண்டும் எனும் பார்வை ஏற்புடையதுதான். ஆனால் அவன் வழியாக வெளிப்படும் கலை அவனை இம்மியளவு கூட அசைக்கவில்லை என்றால், அவனை எவ்விதத்திலும் மேம்படுத்தவில்லை என்றால் அந்த கலை எத்தகையது? ஒசாமா பின்லேடனை ஒரு மாபெரும் அறிவுஜீவியென, அவருடைய அறிவையும், நுண்ணுணர்வையும், நாம் புகழலாம். ஆனால் அந்த அறிவும் நுண்ணுணர்வும் எதற்காக பயன்படுகிறது? பேரழிவை உருவாக்க, அதிகாரத்தை கைப்பற்ற,. அவருடைய அறிவை விதந்தோதலாம் ஆனால் ஒட்டுமொத்தத்தில் அவரை நிராகரித்தே முன்நகர முடியும். கலைக்கும் அதையே சொல்வேன். இந்த உன்னத சாதனத்தை வைத்துக்கொண்டு சுரண்டி, அதிகாரத்தை அடைவான் எனில அது ஏற்புடையது அல்ல. இந்த கவிதையும் கதையும் எல்லாம் எதற்காக? அரசியலிற்கும், அதிகாரத்திற்கும், காமத்திற்கும் தானா? இந்த இலக்குகளை அடையும் தந்திரமாக கலை பயன்படுத்தப்படுகிறதா என்பதே கேள்வி. குறைந்தபட்சம் வைரமுத்துவிற்கு, தன்னுடைய செயலிற்கு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கோரும் மனத்திண்மை இருந்தால், செயலுக்கு பொறுப்பேற்று கொண்டால் (சேத்தன் பகத் கூட தன்னளவில் ஒரு மன்னிப்பை கோரினார்) அதன் பின் அவருடைய கலை பெறுமதியை பற்றி பேசலாம். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. நேர்மாறாக அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்தி பசப்பவும் ம்ழுப்பவுமே முயற்சிகள் நிகழ்கின்றன என ஐயம் எழுகிறது. கலைஞனின் கீழ்மையோ, ஒழுக்கமின்மையோ, போதாமைகளோ ஒரு பொருட்டு அல்ல. ஆனால் அவனுடைய நேர்மையின்மையை அப்படி விட்டுவிட முடியாது. அந்தரங்க நேர்மையற்ற கலைக்கான ஊடகமாக கலைஞன் திகழும்போது அவன் வழியாக வெளிப்படும் கலையும் குறைபட்டதாகவே இருக்கும். 

No comments:

Post a Comment