Thursday, December 1, 2022

வீழ்ச்சியும் மீட்சியும் - வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

 




1

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில்

அவரதைத் தவறவிடுகிறார்

தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்

தன் பாதத்தால் தடுத்து

முழங்காலால் எற்றி

புஜங்களில் உந்தி

உச்சந்தலை கொண்டு முட்டி

இரு கைகளுக்கு இடையே

மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்

மறுபடியும் பாதத்திற்கு விட்டு

கைகளுக்கு வரவழைக்கிறார்

‘' நான் உன்னை விட்டு

விலகுவதுமில்லை;உன்னைக் கைவிடுவதுமில்லை''

பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.

- பிதாவே, இசை 


வண்ணநிலவனின் சிறுகதைகள் வாசித்து முடித்தபோது இசையின் இக்கவிதை மனதை அறுவியபடி இருந்தது. இக்கவிதையில் தொனிப்பது ஆத்திரமா? ஆற்றாமையா? அல்லது மன்றாடலா? திண்ணமாக வரையறுத்துவிட இயலவில்லை. அதுவே அதன்மீதான வசீகரத்தை அதிகரித்தது. வண்ணநிலவனை வாசித்து முடித்த மனநிலையில் எனக்கது மறைமுக மன்றாடலாகவே தொனித்தது. வண்ணநிலவன் படைப்புகளின் ஊடே எழுப்ப விரும்பும் கேள்வியெது? படைப்புகளின் ஊடே  மீண்டும் மீண்டும் சென்று முட்டிமோதி திறக்க/ விடுவிக்க முயலும் புதிர் எது? இக் கேள்விகளை தொடர்வதே இக்கட்டுரையின் நோக்கம்     


நவீன இலக்கிய கதைகளுக்கும் மரபிலக்கிய கதைபாடல்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன? பல சமயங்களில் மரபிலக்கியங்களில் பாடலுக்குரிய கதை நாயகர் நாம் தலைமுறைகளை கடந்து நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய ஏதோ ஒரு விழுமியத்தின் பிரதிநிதி. நாட்டார் தெய்வங்களின் கதை பாடல்கள் சாமானியர்களின் கதைகளை சொன்னாலும் அவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தித்தான் சொல்கிறது. நேர்மாறாக நவீன இலக்கியம், சாமானியர்களின் கதைகளை சாமானிய தளத்திலேயே பேசுகிறது. காவிய, வரலாற்று நாயகர்களைப் பற்றி பேசும்போது கூட அவர்களை சாமானியனாக காட்டவே முற்படுகிறது. அவர்களது உன்னதங்களுக்கு மாறாக வீழ்ச்சிகளையும் பலவீனங்களையும் சித்தரிக்கிறது. 


உதாரணத்திற்கு வண்ணநிலவனின் 'வார்த்தை' எனும் சிறுகதையை எடுத்துக்கொள்ளலாம். பிலாத்துவின் மனைவியின் பார்வையிலிருந்து இயேசு கிறிஸ்து சித்தரிக்கப்படுகிறார். பிலாத்துவுக்குமே கூட அவரை தண்டிக்க பெரிய விருப்பமில்லை. ராணி தன் தோழியான எஸ்தர் வழி அவனை அறிந்தவள். விசாரணையை உப்பரிகையிலிருந்து காண்கிறாள். சுற்றி இருப்பவர்கள் கேலி செய்து வசைப்பாட, தலை குனிந்து அதை கேட்டுக்கொண்டிருக்கிறார்.  தனது அன்னை மேரியை தேடுகிறார். அவளை சந்திக்க முடியாததற்காக வருந்தி குற்ற உணர்வு கொள்கிறார். அனைவரும் வெறுத்து முகத்தில் எச்சில் உமிழும் போது உப்பரிகையில் காணும் பெண்னின் மெல்லிய தலையசைப்பு அவருக்கு பெரும் ஆறுதலை அளிக்கிறது.  'தீங்கு நேராமல் பார்த்துக்கொள்ளவும்' எனும் வார்த்தை வழியாக அளவற்ற பிரியத்தை தெரிவிப்பது போதுமானதாக உள்ளது. எனக்குத்தெரிய வண்ணநிலவன் எழுதிய ஒரே தொன்ம கதை இதுதான். அதிலும் இயேசு கையறு நிலையில் இருக்கும் சாமானியனாக வருகிறார். 



வண்ணநிலவனின் சிறுகதையுலகின் சில பொதுத்தன்மைகளை இக்கதையைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். 

1. வீழ்ச்சியின் சித்திரம் -  கையறு நிலையில் தவிப்பது- இயேசுவின் நிலை 

2. மீட்சி-  ஆறுதல் அளிக்கும் ஒரு மாயக்கரம்- பிலாத்துவின் மனைவியின் தலையசைப்பும், சொல்லும்  



'வீழ்ச்சியின் பாணன்' என வண்ணநிலவனை சொல்லலாம். பல்வேறு வகைகளில், ஆழங்களில் விதவிதமான வீழ்ச்சிகளையும் சிதைவுகளையும் காட்டியபடி இருக்கிறார். வாழ்க்கையின் நிறங்கள் பலவகையானவை ஆனால் சிதைவின் நிறம் என்னவோ சாம்பல் மட்டும் தான். அவர் காட்டும் எல்லா வீழ்ச்சிகளுக்கும் மீட்சி இருப்பதில்லை. பல கதைகளில் சிதைவை மட்டுமே காண்பித்து நகர்கிறார். குறிப்பாக தொடக்கக்கால கதைகளில் இந்த போக்கை தீர்க்கமாக காண முடிகிறது. 


வண்ணநிலவனின் கதை மாந்தர்களின் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் வெளியிலிருந்து எவரும் காரணமில்லை‌. சமூகத்தை நோக்கி ஆவேசத்துடன் விரல் சுட்டுவதில்லை. 'அழைக்கிறவர்கள்' கதையில் வரும் சீக்காளி கணவன் போல அவர்கள் மவுனமாக தங்களைத்தாங்களே ஆடியில் நோக்கி நொந்துக்கொள்பவர்கள். இரண்டு விதமான வீழ்ச்சிகளை அவருடைய கதைகள் சித்தரிக்கின்றன. சில சமயங்களில் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களே பொறுப்பு வேறு பல சமயங்களில் மேலிருக்கும் ராட்டின இருக்கை கீழேயிறங்குவது எப்படி சக்கரச் சுழற்சியில் தவிர்க்கமுடியாத விதியோ அப்படித்தான் இந்த வீழ்ச்சியும் நிகழ்கிறது. 


2


'விமோசனம்' கதையில் மதிப்பாக இருந்த சமையல்காரர் முத்தையா பிள்ளை குடியில் வீழ்கிறார். 'தலையில் சுழிதான் சரியில்லை' என அவர் நிலை குறித்து குறிப்பிடப்படுகிறது. 'ராஜாவும் வாரிசுகளும்' கதையில் பொருளியல் நிலைக்காக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு செல்லும் சிவனு செட்டியார். 'அன்று' கதையில் தேருக்கு சக்கை போடுவதில் நிபுனத்துவம் பெற்ற மாரியப்பன் குடியில் மூழ்குகிறான்.  'துன்பக் கேணி' கதையில் கணவன் சிறையிலிருக்க வயிற்றுப்பிள்ளையோடு வண்டி மலைச்சி சாராயம் கடத்த வந்த முதல் இரவிலேயே சிக்கிக்கொள்வதை காலத்தின் கோலம் என்பதைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும். சிதைவை முழு தீவிரத்தில் சித்தரித்து எழுதப்பட்ட மிக முக்கியமான கதைகளில் ஒன்று  'மிருகம்'. ஒரு வகையில் 'எஸ்தரின்' தொடர்ச்சியாக, அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற பின்பு எஞ்சும் சூனியத்தை துலக்கமுறச்செய்யும் கதையாக வாசிக்க இடமுண்டு. கவிதைக்கு நெருக்கமான மொழியமைப்பு கொண்டது. ஆழத்தின் வன்மம் வெளிப்பட ஏந்த காரண காரியமும் இல்லை. யார் மிருகம்? எது மிருகத்தின் இயல்பு? எனும் முக்கியமான கேள்வியை இக்கதை எழுப்பியது. 

 



வண்ணநிலவனின் கதைகள் மனித அகத்தின் சாம்பல் நிற அடர்வுகளை காட்டும்போது மேலும் மேலுமென ஆழமும் நுட்பமும் பூணுகின்றன. 'பிழைப்பு' ரத்தினம் பிள்ளை எனும் முன்னாள் சண்டியரின் கதை. 'பாம்பும் பிடாரனும்' உருவகமாக நமக்களிக்கும் அதே தரிசனத்தை நிகழ்வுகள் வழியாக இக்கதையும் முன்வைக்கிறது. ரத்தினம் பிள்ளை அறிமுகமாகும்போதே வயதான, பழைய கீர்த்திகள் மட்டுமே எஞ்சும், மதிப்பற்ற முன்னாள் சண்டியராகத்தான் அறிமுகமாகிறார். வாடகையை நம்பி வாழும் பரிச்சயமான பெண் வாடகையளிக்காத குடித்தனக்காரர்களை காலி செய்வதற்கு ரத்தினம் பிள்ளையின் உதவியை நாடுகிறாள். அவருக்கு இந்த பாவம் இனியும் செய்ய வேண்டுமா எனும் எண்ணம் எழுகிறது. 'பல மாசமாக ஒருத்தன் வாடகை கொடுக்க முடியாமல் குடியிருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டவனாக இருக்க வேண்டும். ஆனாலும் அவர் அந்த குடும்பத்தை மிரட்டுகிறார். வக்கற்ற அந்த குடும்பத்தை பாடாகப்படுத்தி வளவுகாரர்கள் முன் தலைகுனியச்செய்ததற்காக வருந்துகிறார். அறமின்மை என்றறிந்தும் அவரால் அதை தவிர்க்க முடியவில்லை. எவர் பிழை? எது அறம்? எதையும் வரையறுக்க இயலாது. 


இலக்கியபிரதி எதையும் இரு துருவங்களாக அணுகாமல் அதை சிடுக்காகவும் சிக்கலாகவும் ஆக்கும்போது முழுமையை நோக்கி நகர்கிறது. வாழ்க்கையை எளிய சமன்பாடுகளுக்குள் வகுத்துவிடக்கூடாது என்பதே இலக்கியத்தின் நியதியாக இருக்க முடியும்.  'மீண்டும்' இத்தகைய சரி தவறுகளுக்கு இடையேயான வெளியில் ஊடாடும் கதை. ஜமக்காள விற்பனை பிரதிநிதியான தண்டபாணியிடம் ஜமுக்காளம் வாங்குவதற்காக முன்பணம் கொடுத்தவன் ஜெகன். ஜமக்காளம் ஜெகன் வீட்டுக்கு வந்த நாளில் அவன் வீட்டில் இல்லை. வந்த தபால் எங்கு சென்றது என தெரியவில்லை. ஜெகனைப் பொருத்தவரை இதற்கு தண்டபாணி பொறுப்பு, தண்டபாணியை பொருத்தவரை இது தன் பொறுப்பல்ல. குடித்துவிட்டு முன்பணமாக அளித்த காசை திரும்பி கேட்கிறான் ஜெகன். 'அன்று' கதையை அறச்சிக்கல் என சொல்லிவிட. முடியாது, எனினும் தேருக்கு சக்கை போடும் மாரியப்பனை அழைக்க சென்ற இடத்தில் அவனுடைய நிர்பந்தத்தின் பேரில் ஈஸ்வரனும் குடிக்கும் போது இனி தன்னை நம்பி தர்மகர்த்தா ஒரு காரியத்தையும் ஒப்படைக்க மாட்டார் என்று உணர்கிறான். நம்பிக்கை உடைவினால் ஏற்படும் தர்ம சங்கடம் அவனை பீடிக்கிறது. 


விளைவுகளை நன்கு உணர்ந்தும் உளத்திடமின்மையால் தீமையை தவிர்க்க முடியாதவர்களாகவும்  சூழல் கொண்டு வந்து சேர்த்த இக்கட்டை தங்களது உள சலனத்தையும்  மீறி  கடப்பவர்களாகவும் என இரண்டு விதமான பாத்திர வார்ப்புகளையும் வண்ணநிலவன் உருவாக்கி இருக்கிறார். வீழ்பவர்களாலும் மீள்பவர்களாலும் நிறைந்தது அவரது கதையுலகம்.  


'நட்சத்திரங்களுக்கு கீழே' கதையில் ஞானப்பிரகாசம் முதலாளியின் ஆணையின பேரில் பாலையாவை பராமரித்துக்கொண்டிருந்தான். பாலையாவின் நிலத்தை எழுதி வாங்குவதற்கான தந்திரம் என ஞானம் உணர்ந்துகொண்டதும் பழிபாவத்தின் மீதான அச்சத்திற்கும் நன்றியுணர்வுக்குமிடையே ஊசலாடுகிறான். நட்சத்திரங்கள் அவனுக்கே அவனுக்கென ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கிறது. பாவத்திற்கு உடன்படாமல் தப்புகிறான். 


3


வண்ணநிலவனின் சிறுகதையில் வரும் பெரும்பாலான கதை மாந்தர்கள் தனித்தவர்கள். மனைவியையோ கணவரையோ தந்தையையோ என எவரையோ இழந்தவர்கள் அல்லது பிரிந்தவர்கள். அல்லது முடங்கிப்போனவர்கள். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே அவர்களுக்கு பெரும்பாடு. எனும் அளவிற்கு வறுமையில் உழல்பவர்கள். மான அவமானங்களால் அலைக்கழிபவர்கள். ஆகவே சமயங்களில் சந்தர்ப்பவாதிகளும் கூட. மனித இயல்புகளின் நம்பகமற்றத்தன்மையை பிரதிபலிப்பவர்கள். 


உறவுகளுக்குள், வன்முறையும், மனிதர்களின் போலித்தனங்களின் மீதான அசூயையும் என நவீனத்துவ அழகியலின் பல்வேறு கூறுகள் மிகக் கூர்மையாக பல கதைகளில் வெளிப்படுகின்றன. மொத்தமாக இந்த சிறுகதைகளை வாசித்து முடித்த போது வண்ணநிலவனின் கதைமாந்தர்கள் எதிர்கொள்ளும் முதன்மை சிக்கல் என்பது உறுதுணையின்மை என தோன்றுகிறது. வீழ்ச்சி தவிர்க்க முடியாததாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்கொள்ளவும் கடந்து செல்லவும் உறுதுணையிருந்தால் கூட போதும். வீழ்ச்சியின் ஒரு பகுதியாக உறுதுணையை இழக்கிறார்கள் அல்லது உறுதுணையின்மையாலே கூட வீழ்ச்சியை எதிர்கொள்கிறார்கள்.


மனித உறவுகளுக்குள் உள்ளோடும் வன்மத்தையும், கணக்குகளையும், சுரண்டல்களையும் கதையாக்குகிறார். 'விடுதலை' கதையில் வயதில் மூத்த கோபால் பிள்ளை பெரிய முதலாளியிடம் அற்ப பொய் சொன்னதற்காக வசை வாங்குகிறார். அவமானத்தில் புழுங்கி தூக்கில் தொங்கி மரணிக்கிறார். பொதுவாக அவமானங்களை சகித்துக்கொண்டு வாழும் நடுத்தர வர்க்கத்தினரின் சித்தரிப்பிலிருந்து விலகிச் செல்லும் பாத்திர வார்ப்பு. தற்கொலையை பற்றிய கதைக்கு விடுதலைஎன தலைப்பு. 'இரண்டு பெண்கள்' 'மைத்துனி' போன்ற கதைகள் பெண்களுக்குள்ளேயே இருக்கும் உரசல்களை சித்தரிப்பவை. 'மனைவி' கதையில் குழந்தைக்கு காய்ச்சல். மருந்துவாங்கக்கூட காசில்லை. கணவன் நண்பனை வீட்டுக்கு அழைத்துவருகிறான். அந்த நண்பன் மனைவியையே நோக்குகிறான். முலையில் கைபட குழந்தையை வாங்குகிறான். இது எதுவுமே தனக்கு புதிதில்லை என மனைவி உணர்கிறாள். கணவருக்கு இதெல்லாம் புரியாது என எண்ணுகிறாள். அங்கிருந்து கிளம்பிச்செல்லும் போது நண்பனிடம்  தனது பிள்ளைக்காக இரண்டு ரூபாய் கடன் கேட்கிறான். ஒருவகையில் தன் மனைவியை காட்சிபொருளாக்கி சூதாடுவதுதான் இது. 'விமோசனம்' மீனா குடிகார தகப்பனால் தொந்திரவுக்கு உள்ளாகிறாள். 'மல்லிகா' வை அவனது சொந்த மாமனே சுரண்டுகிறான். அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையாமல் பார்த்துக்கொள்கிறான். 'துருவங்கள்' பிடிக்காத திருமண வாழ்வில் அகப்பட்டுக்கொண்டு மீள முடியாதவளின் அகக்குரலாக ஒலிக்கும் கதை. 'பேச்சி' சாமார்த்தியசாலியின் கதை. யார் யாரை ஏய்க்கிறார்கள் என்பதை கவனிப்பத ஒரு வேடிக்கை. 'துக்கம்' சிறுவயதிலேயே இறந்து போன மருமகன் பொருட்டு மகள் அழுது தீர்க்கவில்லை, அவனுக்காக அளிக்கப்படும் தொகையை இளைய மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறாள் இறந்தவனின் மாமியார். குரூரம் என சொல்லலாம்தான் ஆனால் அது நடைமுறையும் கூட. பிறர் அவளிடம் அந்த யோசனையை கூறும்போது புதிதாக வியப்படைவதுபோல காட்டிக்கொள்கிறாள். 'குடும்ப சித்திரம்' குடும்பம் குறித்த எந்த கற்பிதமும் இல்லாமல் அதற்குள் இருக்கும் பிணக்கங்ளை காட்டிச்செல்கிறது.  


'ஒரே ஒரு நாள்' எனும் அவரது குறுநாவல் அவரது ஆகப்பெரிய கதை. இதையும் எஸ்தரையும் தவிர்த்து பார்த்தால் அனைத்து கதைகளுமே ஆறேழு பக்கங்கள் நீள்பவைதான். நகரத்து வேலையற்ற பட்டதாரி வாழ்க்கையின் சித்தரிப்பு. நவீனத்துவ அழகியலை முழுமையாக பறைசாற்றும் ஆக்கம் என சொல்லலாம். அக்காலகட்டத்தின் வெறுமையையும் விரக்தியையும் ஆழமாக விவரிக்கிறது. நன்மையின் மீது அவநம்பிக்கை வெளிப்படும், அனைத்தின் மீதும் எரிச்சலும் வெறுப்பும் படர்கிறது. தான் தனித்தவன் எனும் நம்பிக்கை, அனைத்தும் போலி எனும் உணர்வு என 70-80 களின் இருத்தலியல் கேள்விகளை சுமக்கும் கோபக்கார இளைஞனின் அத்தனை இயல்புகளும் கொண்டவன் கதை நாயகன் ராதா. ஒரு நாள் என்பது எத்தனை சுமை மிக்கது? அந்த நாளின் இறுக்கத்தையும் சுமையையும் வாசகருக்கு கடத்துகிறார்.  ஒளியின் மீதான எரிச்சலும் கோபமும் அபாரமாக வெளிப்பட்ட கதை என 'வெளிச்சம்' கதையை சொல்லலாம். இரவெல்லாம் தெருவில் எரியும் மெர்க்குரி வெளிச்சம் ஆபாசமாக வீட்டிற்குள் விழுகிறது. அந்த ஒளி வெள்ளத்தில் வாழ பழகிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் அது அவனை தொந்திரவு செய்கிறது. தெருவில் எரிந்த மெர்க்குரி விளக்கை கல்லெறிந்து உடைக்கிறான். தெருவிளக்கைப் பற்றிய கதையாக மட்டும் இதை சுருக்கி புரிந்து கொள்ளாமல் அவரது அக்காலகட்டத்து பிற கதைகளுடன் மொத்தமாக காணும் போது இக்கதை குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கு. அழகிரிசாமியின் 'இரவு' எனும் சிறுகதை நினைவுக்கு வந்தது. நவீன எழுத்தாளனுக்கு இருளின் மீது பெரும் ஈர்ப்பு எல்லா காலத்திலும் உண்டு. 


4


பிற இருத்தலியல் எழுத்துக்களிடமிருந்து வண்ணநிலவன் வேறுபடும் புள்ளி என ஒன்றைச் சுட்ட வேண்டும் எனில் உறுதுணையற்றதாக தோன்றும் சூழலில் எதிர்பாராத திசையிலிருந்து கரிசனத்துடன் நீண்டு இறுகப் பற்றிக்கொள்ளும் கரம் ஒன்றை பல கதைகளில் நாம் காண முடியும். தொடக்கக்கால கதைகளிலிருந்து அவரது பிற்கால கதைகளை நோக்கி நகரும் தோறும் இந்த மாற்றம் தெளிவாகவே புலப்படுகிறது. அவரது 'ஒரு நாள்' குறுநாவலுக்கு பின்னர் இருண்மையை மட்டும் அப்பட்டமாக சித்தரிக்கும் கதைகள் அருகி, அறச்சிக்கலை பேசு பொருளாக கொண்ட கதைகளை நோக்கி நகர்கிறது. 




உறவுக்குள் இழையோடும் வன்மத்தை சித்தரிப்பது துலாத்தட்டின் ஒரு பக்கம் என்றால் உறவுக்குள் தனது இணையின் தேவையை குறிப்புணர்ந்து கணக்கு வழக்குகளுக்கு அப்பால் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வது என்பது மற்றொரு எல்லை. வண்ணநிலவன் கதைகளில் உடைமை உணர்வு நீத்த பெண்/ஆண் பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் ஆராதிக்கப்படுவதை நம்மால் காண முடியும். உறவின் ஆதாரமே உடைமையுணர்வுதான் எனும் நம்பிக்கை இங்கு உண்டு. உடைமையுணர்வு நீங்கும்போது உறவுக்குள் முகிழும் மெல்லிய மலர்ச்சியை வண்ணநிலவன் வனைகிறார். 


'அயோத்தி' 'மனைவியின் நண்பர்' 'வார்த்தை தவறிவிட்டாய்' போன்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். பெண்களின் உளவியலை எழுதிய அளவிற்கே ஆண்களின் அக விஸ்தீரனத்தை பேசியவை வண்ணநிலவனின் கதைகள். 'அயோத்தியில்' சந்திரா திருமணத்தை சிறையாக உணர்கிறாள். கணவன் புத்தகம் படிக்கும், பிள்ளைக்கு பால் டின் வாங்கிவரக்கூட வக்கற்ற உலகியல் சாமார்த்தியமற்றவன். தன்னை புரிந்துகொள்ளவில்லை எனும்  வருத்தம் எப்போதும் அவளுக்கு உண்டு. 

திருமணம் செய்துகொள்ள விரும்பிய முறைமாமனை எண்ணி ஏங்குகிறாள். 

பெரும்பாலான மனைவிகளைப் போலவே கணவனோடு எப்படியாவது தன்னைப் பின்னிக்கொள்ள வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாள். அவளுடைய அத்தானை மறக்க எவ்வளவோ பிரயாசைப்பட்டும் ஒன்றும் முடியவில்லை. உணர்வுகளை புரிந்து கொள்ளாத புத்தகப்புழு கணவன் அவளுடைய தவிப்பை எப்படியோ உணர்ந்து கொண்டு அத்தானை காண அழைத்துச்செல்லும் புள்ளியில் கதை நிறைவுறுகிறது. கதையின் தலைப்பு 'அயோத்தி'. ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி எனும் வழக்கிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 


'வார்த்தை தவறிவிட்டாய்' காதலித்து கைவிட்ட பெண்னை திருமணத்திற்கு பின் சந்திக்கும்போது அவள் தனது மனைவியுடன் நெருங்கி நட்பாக பழகுவதை கண்டு பதறுகிறான். கடந்தகாலத்தைப் பற்றி ஏதேனும் சொல்லிவிடுவாளோ எனும் அச்சம் அவனுக்கு. ஆனால் அவள் அப்படி எதையும் சொல்லிவிடவில்லை. அவள் சொல்லிவிடக்கூடும் என அவன் எண்ணியதே கூட அவளை சீற்றமடையச்செய்கிறது. 'ராதா அக்கா' இந்த வரிசையில் வரவேண்டிய மற்றொரு கதை. வீட்டைவிட்டு வெளியேறி ஏற்கனவே திருமணமான கோபால் வீட்டிற்கு அவனுடனேயே வாழும் நோக்கில் செல்கிறாள் ராதா. ராதாவை அவர்களுடைய வீட்டார் தேடிவரும்போதுதான் கோபாலின் முதல் மனைவி லீலாமதினி சிக்கலை உணர்ந்துகொள்கிறாள். 'தஞ்சம்ன்னு வந்துட்டா .. இன்னமே அவ என் தங்கச்சிதான், ஏங்கூடத்தான் இருப்பா' என அவளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறாள். 'அவன் அவள் அவன்' பரிமளா குடியில் சீரழியும் தனது கணவரின் மூத்த சகோதனை கவனித்துக்கொள்கிறாள். 'அனுசரனை' அல்லது 'கரிசனம்' எனும் சொல் நினைவுக்கு வந்தபடியுள்ளது. 

'மெஹ்ருன்னிசா' ஒரு நல்ல ஆளுமை சித்திரம். வீழ்ச்சியின் கதைதான் சொல்லப்படுகிறது. வீட்டைச் சித்தரிக்கும் போது முன்பக்கம் வளமாகவும் பின்பக்கம் சிதைந்தும் காணப்படுகிறது என்பதே சிதைவை நமக்கு அறிவிக்கிறது. மச்சில் அமர்ந்து தனியாக ஃபிடில் வாசிக்கக்கூடியவள். தன் வழி கணவருக்கு பிள்ளை வாய்க்காது என்றுணர்ந்தவள் அவளே முன்நின்று கணவருக்கு சுலைகாவுடன் திருமணம் நடத்தி தனியே குடித்தனம் அமைத்துக்கொடுக்கிறாள். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு மெஹ்ருன்னிசா என்றே சுலைகா பெயரிடுகிறாள். 


5


வண்ணநிலவன் கதைகளை எளிய இருமைகளுக்கு அப்பாலான வெளியில் நகர்த்துமாபோது கதைகளின் கணம் கூடுவதை உணர்கிறோம். 'அந்திக் கருக்கல்' கதையில் மருமகள் ரெஜினாளின் துயரத்தை கண்டு மகன் சேர்த்துக்கொண்டு வாழும் பரிமளாவின் வீட்டிற்கு நியாயம் கேட்கச் செல்கிறார். அங்கே அவள் மிக பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறாள். சரி தவறுகளுக்கு அப்பால் அவரவர் நியாயங்களை பேசுகிறது. காலில் விழும் பரிமளாவிற்கு ஆசியளித்துவிட்டு நகர்கிறார் பெரியவர். 'மனைவியின் நண்பர்' கத்தி மீது நடப்பதான கவனத்துடன் எழுதப்பட்ட கதை. ஈர்ப்பு, நட்பு, காதல் என எதுவாகவும் வரையறுக்கப்படாத எல்லையில் நிகழ்கிறது. கணவனின் மனநிலை மிக லேசாக தொட்டுக்காட்டப்படுகிறது. பரந்த மனமா அல்லது வேறு வழியில்லாமல் அனுமதிக்கிறானா? ஐயம் கொள்கிறானா?  'அவன் அவள் அவன்' கதையில் கணவன் பொறாமை கொள்வது வெளிப்படையாகவே பதிவாகியிருக்கும். 'மனைவி' மற்றும் 'மனைவியின் நண்பர்' கதைகளில் கணவன் பலவீனத்தை பயன்படுத்திககொள்ளும் சந்தர்ப்பவாதியாகவே தோன்றுகிறான். 



'அழைக்கிறவர்கள்' சற்றே சிக்கலான, அமைதியிழக்கச்செய்யும் கதை. சீக்காளியாகிவிட்ட கணவரைக் கொண்டு குடும்பமே பிச்சை எடுக்க வைத்து வாழ்கிறது. மனைவி, குழந்தைகள் என அனைவரும் நாடக பாணியில் தயாராகிறார்கள். கணவனை தயார்படுத்துகிறார்கள். குடும்ப அமைப்பின் உறவின் சுரண்டலைச் சித்தரிக்கிறது என வாசிக்க முடியும். இன்னோரு பக்கம் மனைவியை விட்டு வெளியே கஸ்தூரி எனம் பெண்னுடன் கொண்ட உறவின் வழி மொத்தத்தையும் இழந்த கணவன் குற்ற உணர்வில் பிழைநிகர் செய்ய முழு கரிசனத்தோடு ஒத்துழைக்கிறான் என்றும் வாசிக்க முடியும். இதே வரிசையில் வைக்கத்தக்க மற்றொரு கதை 'அரெஸ்ட்' அலுவலக பணத்தை எடுத்துவிட்டு வீட்டுக்குள் ஒளிந்திருப்பதால் குடும்பத்தினருக்கு ஏற்படும் இக்கட்டுகளை பேசுகிறதே. ஒரு கட்டத்தில் தன் தவறுக்கு தான் பொறுப்பேற்று குடும்பத்தை விடுவிக்க முயல்கிறான். 'அழைக்கிறவர்கள்' கதையைப்போலவே சுரண்டல் என்றும் கரிசனம் என்றும் இரண்டு கோணங்களில் இருந்தும் காண இயலும். 'கடன்' குற்ற உணர்வை பேசும் கதை தான். 'பிழைப்பு' கதையை போலவே இங்கேயும் தன் செயலின் இழிவு குறித்து முழு ஓர்மை உள்ளது. யாருக்கும் தெரியாமல் கடன் கொடுத்த அத்தை இறந்து போகிறாள். அதை திரும்ப செலுத்துவதா வேண்டாமா எனும் ஊசலாட்டத்தில் உள்ளான் பாலையா. மனைவி லீலா அவர்களாக கேட்டால் பார்க்கலாம், பேசாமல் இருங்கள் என சொல்லிவிடுகிறாள். லீலா அறிவுறுத்தியது அவனுக்கு ஏற்புடையதாக இருந்ததாலேயே அதை மவுனமாக பின்பற்றினான். லீலாவுக்கு எந்த குழப்பமும் இல்லை. இவன்தான் உறக்கம் வராமல் தவிக்கிறான். 


வீழ்ச்சியும், அற ஊசலாட்டமும், அரவணைக்கும் பெண்னின் பெருந்தன்மையும், அகத்திற்கும் புறத்திற்குமான முரண்பாடும் என வண்ணநிலவனின் முக்கிய புனைவியல்புகளின் அற்புதமான கலவையில் உருவாகி வந்துள்ள கதைதான் 'எஸ்தர்'. தமிழில் அதிகம் கொண்டாடப்பட்ட, பரவலாக பேசப்பட்ட கதைகளில் ஒன்று. அரிசி சோறிலிருந்து கம்புஞ்சோறுக்கு சென்றுவிட்டதை சொல்லும்போதே வீழ்ச்சியின் சித்திரமும் இடப்பெயர்வக்கான காரணமும் துலங்கி வருகிறது. நெருப்புக்குச்சி கூட இல்லாத அளவு வறுமை. ஊரே காலியாகிக்கிடக்கிறது. தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரியான எஸ்தர் சித்தி மகன் முறையிலான சகோதரர்களால் தத்தமது மனைவிகளைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கப்பட்டவள். எல்லாவற்றையும் நிர்வகிக்கிறாள். இரண்டு மருமகள்களின் எதிரெதிர் இயல்புகள் கோடிட்டுக்காட்டப்படுகின்றன. பெரிய அமலத்திற்கு மனதை துக்கத்தில் ஆழ்த்திக்கொள்வதே மகிழ்வளிப்பதாக உள்ளது. இருட்டை அழிப்பது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சு குரல்களும் நடமாட்டமுமே. இருட்டின் முனுமுனுப்பை எஸ்தர் கேட்கிறாள். பாட்டிக்காக நல்ல வேலைக்காரனான ஈசாக்கை விட்டுச்செல்ல முடியாது என முடிவெடுக்கிறாள் எஸ்தர். ஈரமற்ற வறண்ட காற்று வீசுகிறது எஸ்தரின் உள்ளத்தைபோலவே. பாட்டியின் மரணத்தை பெருங்கருணையின் பாற்பட்டு எடுத்த முடிவா அல்லது சுயநலமா? முடிவற்ற நியாயங்களை உற்பத்தி செய்யும் கதை. மொழியும் கூறுமுறையும் பேசு பொருளும் என அனைத்தும் இயைந்து வந்ததே இக்கதையின் வீச்சுக்கு முக்கிய காரணம்.


6


படைப்பு என்பதே காலத்துக்கு எதிராக தனி மனிதன் தனது நினைவுகளை தக்கவைக்கப் பிடிக்கும் முரண்டு என எனக்கு தோன்றுவதுண்டு. 'மனச்சிற்பங்கள்' ஒரு அக உரையாடல் தன்மை கொண்டது. 'கடந்த காலத்துடன் வாழ்வது பிணத்துடன் வாழ்வது போல' எனும் சுற்றத்தாரின் கூற்றை மறுத்து உரையாடல் நகர்கிறது. 'பச்சோந்தி போல காலத்துக்கு காலம் அவ்வக்காலத்து நடையுடை பாவனைகளில் தங்களைப் பறிகொடுத்துத் திரிந்தது அவனுக்கு கஷ்டமாக இருந்தது.' புதுமையின் மீதும் மாற்றத்தின் மீதும் சலிப்பு கொள்கிறான். 'சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்து போகக்கூடாதா?' என ஏங்குகிறான். வண்ணநிலவனின் படைப்புலகை புரிந்துகொள்ள இவையாவும் உதவும். 'ஒரு வேனில் காலத்திலே' ஏறத்தாழ ஒரு நினைவுக்குறிப்பின் தன்மையை கொண்டது. நிர்மலா எனும் பெயருக்கே ஈர்ப்பு இருப்பதாக வண்ணநிலவன் தோன்றச்செய்கிறார். 'விதி' எனும் கதையில் நண்பரின் காதலியை (என்றுதான் எண்ணுகிறேன்) சந்திக்கிறான். அவள் திருமணத்திற்கு பின்பான தனது வாழ்க்கை கதையை சகஜமாக பேசுவாள். நண்பன் மரணமடைந்துவிட்ட செய்தியை அவளுக்கு சொல்ல வேண்டும் என துடிப்பான். ஆனால் அவனைப்பற்றி எதுவுமே கேட்காமல் உரையாடுவாள். பேசிக்கொண்டே அவள் சாலையை கடந்து செல்வாள். அவனோ கடக்க முடியாமல் சாலையின் குறுக்கே நெடுக்கே போகும் வண்டிகளை பார்த்தபடி நிற்பான். அவன் கடந்த காலத்தில் உறைந்தவன். அவளோ போய் கொண்டே இருப்பவள். 'மழை' கதையில் தீபாவளியையொட்டி தனக்கு பிடித்த நண்பனை காணச்செல்கிறான். அவனை தேடியலைந்த பின் அவன் மரணமடைந்துவிட்ட செய்தியை அறிகிறான். நண்பன் மரணமடைந்து கொஞ்ச காலமாகியிருந்தாலும் கூட அந்த செய்தியை கேட்கும் வரை அவனளவில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார். மரணமடைந்துவிட்ட நண்பனின் ஃபேஸ்புக் பக்கம் மரணத்திற்கு பின் அப்படியே இருக்கிறது எனும்போது அண்மையில் இருப்பவர்களைத் தவிர பிறருக்கு இன்மை பொருள்படுவதில்லை.‌ 


அகம் புறம் என காலமாற்றம் இரண்டு தளங்களை கொண்டது. 'யுக தர்மம்' போன்ற கதை புற காலமாற்றத்தை வரவேற்கிறது. வேறு சில இடங்களில் பெண்களின் உடைமாற்றம் குறித்து கதையில் கவவை வெளிப்படுகிறது (நல்ல வேளையாக இன்னும் பெண்கள் சல்வார் கமீஸ் அணிய ஆரம்பிக்கவில்லை- இரண்டு பெண்கள்). மேம்பட்ட சமூகம் எனும் கனவை நல்ல இலக்கியம் ஒருபோதும் மறுதலிக்காது. பெண்னுக்கு திருமணம் முடித்து வைக்க வழியில்லாத குமாஸ்தா பிள்ளை மூத்த மகள் எப்படியாவது தனது வழியைத்தேடிக்கொண்டால் சரி என எண்ணுகிறார். அவளும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறாள். பேருந்திற்காக நிற்கும் பெண்னிற்கு வாங்கி வந்த ரிப்பனை இளைய மகள் வழி கொடுத்தனுப்பும் தருணம் அபாரமான இடம். அவரது ஏற்பு, ஆசுவாசம், ஆசிர்வாதம், கையறுநிலை என எல்லாவற்றையும் அந்த ஒற்றை சமிக்ஞை நமக்கு கடத்திவிடுகிறது. எனக்கு கதை அந்த புள்ளியில் நிறைவடைந்துவிட்டதாக தோன்றியது. ஏறத்தாழ இதேகதையின் வேறொரு சாத்தியத்தை அல்லது தொடர்ச்சியை 'தாசன்கடை வழியாக அவர் செல்வதில்லை' காட்டுவதாக எனக்கு தோன்றியது. மரணத்திற்கு முன் எல்லாம் அற்ப சச்சரவுகளாகிவிடுவதை சொல்லும் கதை. 


'எதனாலோ ஒரு விஷயம் மனசுக்கு பிடித்துவிட்டால் அதை லேசில் விட்டுவிட முடிவதில்லை. ஆனால் அதுவே மற்றவர்களுக்கு ரொம்ப அற்பமாகப் படலாம். இதையா இவ்வளவு பிரமாதப்படுத்தினான் என்று தோன்றும்.' (ராதா அக்கா) தனிமனிதனாக தனது நினைவை காலத்தை கடந்து நிறுத்தும் முயற்சி கலைக்கான ஆதார விசைகளில் ஒன்று. 'எஸ். ஆர். கே' கதையில் வரும் அவர் காலமாற்றத்திற்கு எதிராக மார்க்கண்டேயன் காலனுக்கு எதிராக லிங்கத்தை இறுக தழுவிக்கொள்வதுபோல தனது கடந்த காலத்தை இறுக தழுவிக்கொள்கிறார். 'ஆடிய கால்கள்' சினிமா புகழ் சிதம்பரம் பிடிவாதமாக தனது பழைய காலத்தில் உறைபவன். 'பயில்வான்' குத்துச்சண்டை வீரரையும் 'ஒர்க்ஷாப்' அருணாசலத்தையும் இந்த வரிசையில் வைக்கலாம். 'குணச்சித்திர நடிகர்' கதையில் காலஞ்சென்ற கே.எஸ் ராஜகோபால் எனும் நடிகனை நினைவில் நிறுத்த ஏன் கே.எஸ் ராமன் இத்தனை போராடுகிறான். நன்றியா? அன்பா? கடமையுணர்வா? அல்லது அதன் வழி அவனுக்கு கிடைக்கும் அடையாளமா? திண்ணமாக தெரியவில்லை. காலத்துடன் பொருத்திக்கொள்ள இயலாதவர்கள். மனநிலை பிறழ்ந்தவர்களாக, சாமார்த்தியமற்றவர்களாக, கேலிக்குரியவர்களாகவே சமூகம் அவர்களை நோக்குகிறது. சமூகத்தால் நகையாடப்படுபவர்களின் மீது இயல்பாகவே கலைஞனுக்கு ஒரு கரிசனம் உண்டு. அவர்களை தம்மவர்களாகவே நோக்குகிறான். காலம் குறித்து தனக்கிருக்கும் பதட்டமே அவர்களிடமும் உள்ளது என்பதை உணர்கிறான். 'தோல்வியுற்ற கலைஞன்' என்பது ஒரு ஆழ்படிமம். அத்தனை எழுத்தாளர்களும் ஒரு கதையாவது இதை தொட்டு எழுதியிருப்பார்கள். 'சிற்பியின் நரகம்' தொடங்கி 'புலி கலைஞன்' 'முருகேசனும் முழுக்கை சட்டை போட்டவரும்' 'அம்மையப்பம்' 'கானல் நதி' என பல கதைகளும் நினைவில் எழும்பி அமைகின்றன. தன் காலத்திற்கு பின் தான் யார்? உடல் நீத்த பின் தன் ஆயுள் என்ன? கலைஞனை அலைக்கழிக்கும் கேள்வி. 'தேடித்தேடி' இலக்கிய ஆர்வத்தில் வீட்டை விட்டு அடிக்கடி வெளியேறிச்செல்பவனைப் பற்றி குடும்பத்திற்கு இருக்கும் பதட்டத்தை பற்றிய கதை.‌ 'அயோத்தி' 'உள்ளும் புறமும்' கதைகளின் நாயகனின் அதே வார்ப்புடையவன்.


7


'பலாப்பழம்' இவரது கதை மாந்தர்கள் பலருக்கு பொருந்தும் உருவகம் என தோன்றியது. புறத்தில் முள்ளும் உள்ளே கனிவும் கொண்டவர்கள். 'உள்ளும் புறமும்' நீலாவையம் சங்கரனையும் கவனித்தால் நீலாவிற்கு புறத்தில் சலிப்பும் உள்ளே அன்பும் உள்ளது, சங்கரனுக்கு உள்ளே அன்பும் புறத்தில் அக்கரையின்மையும் உள்ளது. இதற்கு நேர் எதிரான சித்தரிப்புகளும் கூட உண்டு.‌ வண்ணநிலவன் தொடர்ந்து மனிதனின் கபடங்களையும் போலித்தனங்களையும் சித்தரித்தபடி உள்ளார். உன்னதங்களுக்கு அடியில் ஒளிந்திருக்கும் வன்மத்தை தொட்டுகாட்ட முயல்கிறார். மனித இயல்புகளின் இந்த அக புற இசைவின்மையில் எழும் முரண்கள் மீது அவருடைய கதைகள் உருக்கொள்கின்றன. 'சமத்துவம் சகோதரத்துவம்' இஸ்லாமிய சமூகத்திற்குள் அதன் லட்சியத்திற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடை சுட்டிக்காட்டுகிறது. மார்க்கத்திற்குள் இருக்கும் ஏழை இஸ்லாமியருக்கு ஜமாஅத் உதவுவதைவிட புதிதாக மாறி வருபவர்களுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படும் முரண்பாடை பேசகிறது. 


வண்ணநிலவனை கோபுரங்களின் சுதை சிற்பி அல்லது கோட்டோவியக்காரர் என சொல்லலாம். நுண்மையே அவரது பலம். குறைவான சித்தரிப்பின் வழியே ஆழத்தின் அலுங்கல்களை சித்தரிக்க முயல்கிறார். 'பலாப்பழம்' போன்ற கதை எனக்கு முழுதாக பிடிகிட்டியதா என சொல்வதற்கில்லை. அந்த பூடகத்தன்மையே மீண்டும் மீண்டும் அக்கதையை நாட வைக்கிறது. 'பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்' எனும் தலைப்பில் உள்ள பூடகமும் வசீகரமும் அந்த கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது. புழக்கத்தில் உள்ள நாகக்கன்னி எனும் சொல்லை தவிர்த்து இத்தகைய தலைப்பை தேரும்போது அதன் அர்த்த சாத்தியங்கள் பெருகுவதை கண்கூடாக காண முடிகிறது. சில உவமைகள் நினைவைவிட்டு அகலவில்லை. 'வண்டி மை மாதிரி இருட்டு அப்பிக்கிடந்தது- (அந்த இரவில்).' பல இடங்களில் நுண்ணிய புலன் அனுபவங்களை அளிக்கிறார். உதாரணமாக 'ஏக்கம்' கதையில் உள்ள ஒரு பத்தியை இங்கு அளிக்கிறேன். 'குத்து விளக்கு மாடத்துக்கு முன்னால் வாழைப் பழத்தில் குத்தி வைத்திருந்த ஊதுபத்தி எரிந்து முடிந்திருந்தது. சிவப்புச் சாயம் தோய்த்த அந்த வெறும் குச்சி மட்டும் பழத்துக்கு மேலே கொஞ்சம் நீட்டிக்கொண்டிருந்தது. அந்தக் குச்சியை உருவினால், பழத்துவாரத்தின் வட்ட விளிம்பில் குச்சியின் சிவப்புச் சாயம் ஏறியிருக்கும். சில சமயம் பழத்தினுள்கூட அந்தச் சாயம் இறங்கியிருக்கும். சாயம் இறங்கிய பழப் பகுதியைச் சாப்பிடும்போது, அதன் சுவையும் மணமும் வித்தியாசமாக இருக்கும்.'


நுண்மையாக்கத்தின் உச்சம் என 'பாம்பும் பிடாரனும்' கதையை கூறலாம். தமிழ் சிறுகதை வரலாறில் இக்கதைக்கென ஒரு இடம் நிச்சயம் உண்டு. இது ஒரு முழு உருவக கதை. சிறந்த உருவக கதை காலந்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும். புதிய புதிய பொருள் அடுக்குகளை அளிக்கும். வண்ணநிலவனின் படைப்புலகுடன் பொருத்திப் பார்க்கும்போது குடும்ப அமைப்புக்கும் பெண்னுக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதை என முதல் வாசிப்பில் தோன்றியது. 'யுக தர்மம்' போன்ற கதையில் மாறிவரும் காலகட்டத்தைப் பற்றிய பிரக்ஞை வெளிப்படுகிறது. காலனி ஆட்சிக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு என பல்வேறு அரசியல் தளங்களுக்கு இக்கதையை பொருத்திப்பார்க்க இயலும். எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் தனக்கு மிகப்பிடித்த, தான் மீது தாக்கம் செலுத்திய கதைகளில் ஒன்றாக பாம்பும் பிடாரனைக் குறிப்பிடுகிறார். 


வண்ணநிலவனின் அதிகம் கவனிக்கப்படாத வேறு இரண்டு தனித்தன்மைகளையும் கவனப்படுத்த வேண்டும். கதைகளில் அவர் சித்தரிக்கும் விதவிதமான வாழ்க்கைப் பிண்ணனி அவரெழுதிய காலத்தில் அரிது. 'எஸ்தர்' போன்ற கிறித்தவ பிண்ணனி கதைகள் புகழ்பெற்றவை. பிராமண பின்புலத்தில் எழுதப்பட்ட 'சாரதா' ஒரு எல்லை என்றால் வெட்டியானின் வாழ்வை விவரிக்கும் 'மயான காண்டம்' மற்றொரு எல்லை. பிணம் விழாத காலத்தில் குலதெய்வமான சுடலைமாடனின் சந்நிதியில் நின்று சங்கூதி மாடனின் உண்டியல் காசை எடுத்துச்செல்கிறான். 'பிணத்துக்காரர்கள்' பிணத்தைக் காட்டி பிச்சை எடுக்கும் சகோதரர்களின் கதை. பெண் பிணத்துக்காக அலைகிறார்கள். காடு இக்கதையில் உருவகத்தன்மையை அடைந்திருந்தாலும் ''காட்டில் ஒருவன்' கதையை ஒரு எம்.எல் காரனின் கதை என வாசிக்க இயலும். 'குழந்தைகள் ஆண்டில்' 'நரகமும் சொர்ககமும்' 'அவனுடைய நாட்கள்' போன்றவை குழந்தை தொழிலாளர்கள் வாழ்வை பேசுபவை. 'பயில்வான்' 'சமத்துவம் சகோதரத்துவம்' 'மெஹ்ருன்னிசா' போன்ற கதைகள் இஸ்லாமிய வாழ்க்கைப்புலத்தை பேசுபவை.'குணச்சித்திர நடிகர்' மரணமடைந்த நடிகரின் மேலாளரின் கதை. 'பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்' ஊர்ஊராக பொருட்காட்சி போடும் குழுவினரின் வாழ்க்கையை பின்புலமாக கொண்டது. 'இரண்டு உலகங்கள்' திருவிழாவில் ராட்டினம் போடுபவர்களைப் பற்றிய கதை. 'தர்மம்' கூலிப்படையினர் பற்றிய கதை. ரிக்கார்டு டான்ஸர்களான சினிமா புகழ் சிதம்பரம் மற்றும் ரஞ்சிதத்தின் வீழ்ச்சியின் கதையை சொல்லும் கதை 'ஆடிய கால்கள்'. 'ஹரியின் புத்திரி' சாதி கலவரத்தினூடே பாதிக்கப்படும் பெண்களின் கதையை சொல்வது. 



8


வண்ணநிலவனின் கதைகளில் அவ்வளவாக கவனிக்கப்படாத இரண்டாவது பகுதி என்பது அவரது பகடிக்கதைகள்தான். இலக்கிய உலகம் சார்ந்த கதைகளில் அபாரமான பகடி கைக்கூடி வருகிறது. 'இதோ இன்னோரு விடியல்' என்பது சிற்றிதழ் சூழலின் மீதான பகடி. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு முகச்சாயல் உள்ளதாக கற்பனை செய்துகொண்ட பஞ்சுமிட்டாய் விற்கும் ராஜூ தனது பேருக்குமுன் முள்ளுக்காடு எனும் பெயரை சேர்ந்துககொண்டான். 'தென்பொருநைத் தென்றல்' இதழின் ஆசிரியர் முகிலுக்கு 'ஜன்னல் இல்லாமல் கவிதை எழுத வராது.' 'கதாப்பாத்திரங்களின் பெயர் வராதவாறு, 'அவன் இவன்' என்று எழுதினால் போதும் அந்தக் கதை இலக்கியத்தரம் ஆகிவிடும் என்பது முகிலின் திடமான இலக்கியக்கொள்கை.' 'தீவிரவாதிகள் செய்த திருக்கூத்து' பரபரப்புகளை நுகரும் மக்களின் மனப்போக்கு எள்ளுகிறது. 'பேச்சுத்துணை' பேச ஆள்பிடிக்க காத்திருக்கும் வயோதிகரைப் பற்றி மென்மையான பகடி. 'ஞாயிற்றுக்கிழமை' நல்ல நுட்பமான பகடி கதை. தங்கக்கனி மிஸ்ரா, அம்ருதவர்ஷனும் அவனது மனைவியும், ஜோன்பூர் இருசப்ப பிள்ளை என வினோதமான ஆளுமைகளைப் பற்றிய விவரனைகள் புன்னகைக்க வைக்கும். தங்கக்கனி மிஸ்ராவைப் பற்றி இப்படி எழுதுகிறார் 'தங்கக்கனி மிஸ்ரா திருநெல்வேலியில்தான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என பத்து பதினைந்து வருஷங்களாகக் கோரிக்கை வைத்து பேசிவந்தான். அவனுடைய கோரிக்கை மீது ஆவன செய்யப்படாமலேயே இருந்தது. ஆவன செய்யக்கூடிய கோரிக்கை எதுவென்று யோசித்தான். பிறகுதான் 'வீடுதோறும் முருங்கை மரம்' இயக்கம் ஒன்றை ஆரம்பித்தான்.' தனது அலுவலக சகாவின் மனைவி பற்றி தனஞ்செயனுக்குள்ள அபிப்ராயம் 'அவள் ஒரு செமினாரினி. உலகெங்கும் நடந்த நூற்றுக்கணக்கான செமினார்களில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக கலந்துக்கொண்டு இன்னும் சிறப்பித்து வருபவள்.' பிச்சாண்டி பானர்ஜியும்' அபாரமான பகடி மிளிர்ந்த கதை. இன்றைய காலகட்டத்து புண்படுதல் பண்பாட்டுடன் இயைந்து வரும் கதை. எந்த கதை எழுதினாலும் ஏதோ ஒரு சங்கத்துக்காரர்கள் கொடி பிடித்து மிரட்ட வருகிறார்கள். எல்லா சங்கங்களுமே அனைத்திந்திய என்றுவேறு சேர்த்துக்கொள்கிறார்கள். சங்கத்துக்காரர்களிடமிருந்து தப்பிக்க எழுத்தாளர் ராமையா கண்டடையும் வழிமுறை இதுதான். 'கதைகளில் கதாபாத்திரங்களின் தமிழ்ப்பெயர்களுடன் வடநாட்டுக்காரர்களின் பெயரையும் சேர்த்து எழுதினால் என்ன' ராமையாவிற்கு பிச்சாண்டி என்றொரு மாமா. அவரை மேற்சொன்ன சூத்திரத்தின்படி பிச்சாண்டி பானர்ஜியாக ஆக்குகிறான் ராமையா. 


 'பதில் வராத கேள்விகள்' 'அசந்தர்ப்பம்' ஆகிய இரண்டு கதைகளுமே குழந்தைகளின் குறுக்குகேள்விகள் ஊடே வரும் வடிவில் எழுதப்பட்ட கதைகள்தான். ஆனால் அசந்தர்ப்பம் இலகுவான 'அந்த இரவில்' ஒரு கலவரத்தைப்பற்றி கனவு கண்டு விழிக்கும் கதை என்றால் 'பகல் கனவு' கதையில் இழுத்துக்கொண்டிருக்கும் உயிரை பறிப்பதற்காக எமன் உடலெடுத்து வந்து திண்ணையில் அமர்ந்து இருக்கிறான் என சாகக்கிடப்பவரின் தங்கை ராமாச்சி ஆச்சி காண்கிறான். அவனை உள்ளே விடாமல் தடுத்து அனுப்புவது என்பதே அவளுக்கு யோசனை. கடைசியில் அது ஒரு பகல் கனவு என முடிகிறது. இழுத்துக்கொண்டிருக்கும் பரிபூரணத்தம்மாள் போய்ச்சேர மாட்டாளா எனும் ஏக்கத்தின் தூல வடிவம். 

 


9



நவீனத்துவ அழகியலில் ஃபிராய்டியம் கனிசமான செல்வாக்கை செலுத்தியது. ஆதவன் போன்றோரிடம் ஃபிராய்டியத்தின் தாக்கத்தை காண முடியும். மனிதர்களுக்கு இடையேயான அத்தனை உறவுகளையும் பாலியல் கோணத்தில் மட்டும் அணுகுவது என்பது எத்தனை அபத்தம் என இன்று நாம் உணர்கிறோம். ஆனால் ஃபிராய்டியம் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் எல்லா உறவுகளுக்கும் பாலியல் உள்நோக்கத்தை கற்பிக்காமல் பாலியல் குறுக்கல்வாதத்துக்கு எதிரான வலுவான மறுப்பை பதிவு செய்யும் கதைகளாக வண்ணநிலவன் கதைகளை காண முடியும். 'சரஸ்வதி' கதையில் திருமணமாக இருக்கும் சரஸ்வதிக்கும் தம்பியென வரிந்துகொண்ட பதிமூன்று வயது தெய்வுக்கும் இடையேயான உறவு பேசப்படுகிறது. வீழ்ச்சியின் சித்திரத்தை அளிக்கும் 'கெட்டாலும் மேன்மக்கள்' கதையில் தன் முதலாளி அரிகிருஷ்ணன் மரணித்த பிறகு நிர்வாகத்தை எடுத்து நடத்தும் சந்திராவிற்கு விசுவாசமாக இருக்கும் சுப்பையா ஒரு நல்ல உதாரணம். சுப்பையாவிற்கு திருமணமாகவில்லை. சந்திரா இளம் விதவை. ஊர் இவர்கள் உறவை எந்த கோணத்தில் காணும் எனும் எச்சரிக்கையும் கதையில் விடுக்கப்படுகிறது. ஆனால் பாலியல் உறவு எனும் வரையறைக்கு அப்பாலான உறவை தொடர்கிறார்கள்.


'கெட்டாலும் மேன்மக்களின்' சுப்பையாவும் 'வெள்ளித்திரையின்' பாபுவம் ஒரே வார்ப்பு. 'வெள்ளித்திரையின்' நாயகனாக வரும் பாண்டுவும் 'குணச்சித்திர நடிகரின்' கே.எஸ் ராஜகோபாலும் ஒரே வார்ப்பு. பாபுவின் வயோதிக வடிவம்தான் கே. எஸ். ராமன். பாண்டு எனும் நடிகனின் சீரழிவையும் அவனை இறுக பற்றியிருக்கும் பாபு எனும் சாமானியனின் கனிவையும் 'வெள்ளித்திரை' பேசுகிறது.


இருண்மை, ஊசலாடுதல் ஆகிய இரு நிலைகளை கடந்து ஒளியில் நிலைபெறும் கதைகள் எழுதியுள்ளார். இந்த மூன்று நிலைகளையும் நேர்கோட்டு படிநிலையென கொள்ள முடியாது என்றாலும் அவற்றில் ஒரு வடிவத்தை காண முடிகிறது. 'மேட்டு வயல்' கதையில் எட்வர்டின் வயலில் பரம்பரை பரம்பரையாக வெள்ளாமை பார்த்துக்கொண்டிருந்த செல்லையாவிடமிருந்து வேறொருவருக்கு உரிமை மாற்றி அளிக்கப்பட்ட போது அவன் அதற்கு எதிராக முறையிடுகிறான். எட்வர்டின் மனைவி ரோஸலின் அவன் மீது பரிவு கொண்டு அவனுக்கான உரிமையை மீட்டு அளிக்கிறாள். 'அறம்' ஆச்சியை நினைவூட்டும் பாத்திரம். 'திருடன்' கதையில் வரும் அமலி பிடிபட்டு வதைபடும் திருடனிடம் கருணை காட்டி யாருமில்லாதபோது அவனை விடுவிக்கிறாள். விவிலிய வசனங்கள் கதைகளுக்கு ஆழத்தை அளிக்கின்றன. அமலி ஒரு மெய்யான கிறித்தவர், இயேசு இத்தகைய சூழலில் என்ன செய்திருப்பாரோ அதையே செய்தாள்.



'பிணந்தூக்கி' ஒருவகையில் ஜெயமோகனின் 'சோற்றுக்கணக்கை' நினைவுபடுத்தும் கதை. ஸ்டூடியோ வைத்திருந்த பாப்பு பிள்ளையை பிணமாக கிடத்தியிருக்கிறார்கள். அவரை தூக்கிச் செல்ல நால்வர் அழைக்கப்படுகிறார்கள். தங்களுக்குரிய முறையை சரியாக செய்துவிடவேண்டும் என எண்ணியிருக்க ரங்கன் மட்டும் பாப்பு பிள்ளைக்கும் தனக்குமான உறவை எண்ணி உருகுகிறான். பிணத்தை இறக்கிவைத்துவிட்டு அதற்கான பலன் ஏதையும் எதிர்நோக்காமல் அங்கிருந்து செல்கிறான். அவனால் சாத்தியமான வழியில் கணக்கை நேர் செய்து கொண்டான். நன்றியை தெரிவித்தான். எவருக்கும் தெரிய வேண்டியதில்லை. இறந்து போன பாப்பு பிள்ளைக்கும் தெரியபோவதில்லை ஆனாலும் ஒரு சிறிய உளமார்ந்த செயல். 


சமயங்களில் இத்தகைய கரிசனத்துடன் நான் வாழும் நிதர்சனத்தில் மனிதர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏக்கம் தோன்றியதுண்டு. பிற உயிரினங்களிலிருந்து மனிதன் வேறுபடும்   மிக முக்கியமான புள்ளி என  மனித இனத்தின் 'தன் விருப்பு' திறனை அறிவியல் கருதுகிறது. எனினும் இந்த தன் விருப்பு எத்தனைக்கு எத்தனை ஆக்கப்பூர்வ விசையாக திகழ்கிறதோ அத்தனைக்கு அத்தனை மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஆற்றலாகவும் இருக்கிறது. இருத்தலியல் கேள்விகள் மனித இனத்தின் தர்க்கமற்ற செயல்களின் மீதெழும் திகைப்பு என்று கூட சொல்ல முடியும். வண்ணநிலவன் அவ்வகையில் மனிதர்களின் வீழ்ச்சியை அதன் வெவ்வேறு சாயைகளுடன் சித்தரித்துள்ள மிக முக்கியமான எழுத்தாளர். மிக குறைவான ஆனால் கூர்மையான சொற்களில் மனித அகத்தின் ஆழங்களை காட்டிச்செல்கிறார். தங்கள் எல்லைகளை கடந்து பரந்து விரியும் எளிய மனிதர்கள் உயிர்ப்புடன் வருகிறார்கள். 




No comments:

Post a Comment