Thursday, January 5, 2023

மரணமின்மை எனும் மானுடக் கனவு- நூல் முகம்

 







குறைந்தது ஐந்தாறு தலைமுறைகளாக சித்த மருத்துவம் பார்த்துவரும் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் குடும்பத்திற்குள் சித்த மருத்துவம் எப்போது, எப்படி வந்தது என்பதே எனக்கு இன்று சுவாரசியமான ஆராய்ச்சியாக இருக்கும். இளவயதில் அரசு சித்தமருத்துவராக எங்கள் பகுதியில் புகழோடு இருந்த தந்தையை இழந்து விட்டிருந்தாலும், வெற்றுடலுடன் நோயாளிகளை பார்க்கும் என் தாத்தாவின் அலுமினிய மருந்து பெட்டியை தூக்கிக்கொண்டு அவருடன் சென்ற வகையில் சில மருத்துவ அனுபவங்களை பால்யத்திலேயே பெற்றிருக்கிறேன். அவர் நாடி நோக்குவதில் விற்பன்னர். மரண குறிகளை கச்சிதமாக அறிந்தவர் எனும் பெயரும் உண்டு. கண்கூடாக சில அசாதாரண தருணங்களுக்கு சாட்சியாக இருந்தபோதிலும் கூட அவருடைய முறைமைகளின் மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை. 'அம்புப் படுக்கை' கதையில் அவரது சித்திரம் உள்ளது. 


பனிரெண்டாம் வகுப்பு  மாணவர்கள் போல் தமிழகத்தில் பாவப்பட்ட ஜீவன்கள் வேறு எவரும் இல்லை. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் நான் நவீன மருத்துவராக ஆக வேண்டும் எனும் வேட்கை கொண்டிருந்தவன். அரைமணிநேரம் கூட சேர்ந்தார்போல் அவருடைய இறுதி நாட்களில் அவரோடு செலவழித்ததில்லை. நாடியின் நுணுக்கங்களை கற்பிக்க முயன்றார், சித்தர் பாடல்களை கூறி விளக்கமளிக்க முயல்வார். ஆனால் இவையேதும் என் சிந்தையை எட்டியதே இல்லை. அன்றைய காலங்களில் என்னை சித்த மருத்துவனாக நான் கற்பனை செய்து கொண்டதில்லை. நான் இச்சூரணங்களையும் லேகியங்களையும் தைலங்களையும் சீந்த போவதில்லை. சட்டையணியாத எளிய கிராமத்து வைத்தியனாக என்னால் வாழ்ந்திட முடியாது என உறுதியாக நம்பினேன். தாத்தா அவ்வாண்டே உடல் நீங்கினார் காலம் என்னை ஆயுர்வேத மருத்துவனாக ஆக்கியது. 




ஒருவகையில் தாத்தாவை, அவரின் அறிவை உதாசீனபடுத்திவிட்டேன் எனும் குற்ற உணர்வு எப்போதும் எனக்குண்டு. இப்போது பார்க்கும்போது இது ஏதோ ஒரு ஊரில் ஒரு பேரன் தனது தாத்தாவை உதாசீனப்படுத்தினான் என்பதல்ல. காலனியம் அறிவுத்தொடர்ச்சியை எப்படி மழுங்கடித்தது என்பதற்கான விடையாக இருக்கலாம்.  மீறலும் தொடர்ச்சியும் கொண்டதே  தலைமுறைகளுக்கு இடையேயான உறவு. காலனியம் இந்த சமன்பாடை குலைத்தது.   மரபு மீறலுக்கான சாத்தியத்தை குறைவாகவும் தொடர்ச்சிக்கான சாத்தியததை அதிகமாகவும்  முன்வைத்தது என்றால் நவீனம் இதை தலைக்கீழாக்கியது. அவரின் நினைவுகளுக்கும் அவரளித்த ஆசிகளுக்கும் நான் செலுத்தும் சிறிய மரியாதை எனும் உணர்வு இந்நூலை எனக்கு மேலும் நெருக்கமாக்குகிறது.மூன்று  பகுதிகளை கொண்டது இந்நூல். முதல் பகுதி ஆயுர்வேதத்தை வரலாறு, மானுடவியல் மற்றும் சமூக நோக்கில் அணுகுகிறது. 'காந்தியும் ஆயுர்வேதமும்' ஏற்கனவே நாளைய காந்தியின் இடம்பெற்றுள்ளது. இந்த நூலின் மிக முக்கியமான பகுதி இதுவே. மூன்றாம் பகுதி 'ஆரோக்கிய நிகேதனம்' மற்றும் 'சுளுந்தீ ' ஆகிய மரபு மருத்துவம் தொடர்பான நாவல்கள் குறித்த விரிவான விமர்சனங்களை உள்ளடக்கியது. இரண்டாம் பகுதியில் இடம்பெற்றிருக்கும் 'பிஷக் உத்தமன்' கட்டுரை மருத்துவர் மகாதேவனுடனான நேர்காணல் நூலான 'முதற்கால்' நூலில் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையைத்தவிர்த்து பிற அனைத்தும் புத்தக மதிப்புரைகள். எழுத வந்த தொடக்க  எழுதியவை. இன்று வாசிக்கும்போது இக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துக்களை அதே உறுதியுடன் இன்று நான் சொல்ல மாட்டேன். நவீன மருத்துவம், நவீன  அறிவியல் அன்று எனக்கிருந்த அதீத அவநம்பிக்கை இன்று இல்லை. அறிவியல் ஆயுர்வேதத்தை அங்கீகரிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு ஈடேறாததன் கசப்பு என சொல்லலாம்.  அறிவியலின் அங்கீகாரம் அல்லது அறிவியல் எனும் அடையாளத்தை ஆயுர்வேதம் சுமக்க வேண்டியதில்லை. தேவையில்லாத சிலுவை எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆயுர்வேதம் அதன் எல்லைகளுக்குள் நின்றபடி, அது எடுத்துக்கொண்ட உலக பார்வைக்கு உண்மையாக இருந்தால் போதும். 'மருத்துவத்திற்கு மருத்துவம்' கட்டுரையை வாசிக்கும்போது நவீன மருத்துவத்தின் அற சிக்கல்களை எளிமைப்படுத்தியிருக்கிறேன் எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மருத்துவத்தை தொண்டு என நோக்கும் மக்கள் திரளுக்கும்  அதை தொழில் என நோக்கும் நிபுணர் தரப்பிற்கும் இடையேயான விழுமிய உரசலில் இருந்து என் பார்வை எழுந்துள்ளது. மருத்துவம் தொண்டிலிருந்து தொழிலுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. நிலப்பிரபுத்துவ கால புனிதம் எனும் விழுமியத்தை அத்துடன் இணைத்து காணவேண்டியதில்லை. மேலும் அற மீறல்கள் நவீன மருத்துவத்தில் மட்டுமே உள்ள ஒன்றும் இல்லை. மூலிகை மருந்துகளில் நவீன மருந்துகளை கலப்பது, கலப்படம் செய்வது, விளம்பரம், மருந்துகளை புட்டியிலிருந்து நீக்கி அதீத விலை வைத்து விற்பது, மருந்து சீட்டில் மருந்தின் பெயர் எழுதுவதில்லை, பஞ்சகர்மா சிகிசிச்சைகளின் அதீத விலை, போலி வாக்குறுதிகள், போலி மருத்துவர்கள் என இந்திய மருத்துவ முறைகளும் எவ்வகையிலும் குறைவில்லை. பெரும்பாலான சமயங்களில் பரிசோதனைகள் வெறுமே காசு பறிக்க செய்யப்படுவதில்லை என்பதை அனுபவத்தின் ஊடாக புரிந்துகொண்டேன். நோயை உறுதிப்படுத்த, அதன் தீவிரத்தை அறிய, அறுவை சிகிசிச்சை தேவையா என முடிவெடுக்க, மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய என  பல நியாயமான காரணங்கள் உள்ளன. கட்டுரைகளில் என் கருத்துக்களை திருத்த நான் விரும்பவில்லை. அது அந்த காலகட்டத்தில் எனது மனநிலையை உண்மையாக பிரதிபலித்தது என்பதால் முன்னுரையில் இந்த விளக்கங்களை அளிக்கிறேன். ஆயுர்வேதம் தொடர்பாக இன்னும் சில கட்டுரைகளை எழுதுவேன் என்றே எண்ணுகிறேன். தொகுக்கப்படாத குறிப்புகள் மட்டுமே சில நூறு பக்கங்கள் நீளும்.   


இந்நூல் உருவாவதற்கு சிலருக்கும் நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். நான் ஆயுர்வேத மருத்துவனாக தொடர்வதற்கு  முக்கியமான காரணிகளில் ஒருவர் ஆயுர்வேத மருத்துவர்  டாக்டர் மகாதேவன். ஆயுர்வேதம் குறித்த எனது குறை புரிதல்களை நீக்கி அதுகுறித்தான நேர்மறை சிந்தனையை என்னுள் விதைத்தவர். மற்றொரு வகையில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியுடையவனாகிறேன். பல சமயங்களில் அறிவியல் சார்ந்த அவருடைய உறுதியான நிலைப்பாடுகள் என்னை சீண்டி இருக்கின்றன. நல்லவேளை நான் அவருக்கு சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றாமல் அவ்வினாக்களுக்கு விடை தேடி நிறைய வாசிக்க தொடங்கினேன். ஆயுர்வேதத்தின் சிக்கல்களை உள்ளிருந்து நோக்கவும் அதன் சாதக பாதகங்களை இயன்றவரை வெளியிலிருந்து எடைபோடவும் முயன்றுள்ளேன்.. காலஞ்சென்ற சித்த மருத்துவர் டாக்டர். திருநாராயணன் மற்றும் மருத்துவர் கு. சிவராமன் ஆகியோருடன் இந்திய மருத்துவ முறைகளின் சிக்கல்கள் குறித்து விவாதித்து பல புரிதல்களை எட்டியுள்ளேன். மருத்துவ மானுடவியல் பேராசிரியர் டாக்டர். ப்ரிஜிட் செபாஸ்டியா, இந்திய மருத்துவ முறைகள் குறித்து ஆய்வுகளை செய்து வருபவர். அவருடைய நட்பும், அவர் வழி பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு மையத்திலிருந்து கிடைத்த புத்தகங்களும் எனது புரிதல்களை விஸ்தரித்தன. இந்த நூலை எனது தாத்தாவிற்கு கல்லூரிக்கும் சமர்ப்பணம் செய்துள்ளேன். ஆயுர்வேதத்தின் இருவகையான கற்றல் முறைகளும் ஒன்றை ஒன்று நிரப்பும். கண்ணன், தினேஷ், ஷியாம் ஆகிய என் கல்லூரி நண்பர்களையும், சீனியர்களான மகேந்திரன், சுந்தர், பிரின்ஸ் ஆகியோரையும், எனது கல்லூரி ஆசிரியர்களான சந்திரசேகர், ஸ்ரீ ராமகிருஷ்ணன், சக்கரவர்த்தி ஆகியோரையும் இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன் நான் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவனாக வருவேன் என என் ஆசிரியர்கள் நம்பினர்.  ஆனா;ல் எனக்கு வேறொரு கிறுக்கு பிடித்துக்கொண்டது. வாசிக்கவும் எழுதவும் அனுமதிக்கும் சுதந்திரத்துடன் கூடிய இலகுவான தொழில் வாழ்க்கையையே நான் தேர்ந்தெடுத்தேன். 'ப்ரித்வி' அமைப்பின் பிரதீப் மற்றும் பரிதோஷ ஆகிய நண்பர்களுடனான வாதங்கள் எனக்கு பலவகையில் உதவியுள்ளன. எழுத்தாளர் போகன், அனீஸ் கிருஷ்ணன் நாயர், யோக ஆசிரியர் சவுந்தர் குருஜி, நவீன மருத்துவர் மாரிராஜ், எழுத்தாளர் நாகப்பிரகாஷ் ஆகியோருடன் ஆயுர்வேதம் குறித்து உரையாடியவை, விவாதித்தவை என்னை தொகுத்துக்கொள்ள உதவியிருக்கிறது. 


நூல் உருவாக்கத்தில் பெரும் உறுதுணையாக இருந்தவர் என் மனைவி டாக்டர்.மானசா. நூலை வாசித்து ஆலோசனைகளை வழங்கிய நண்பர் நட்பாஸ் பலவகையிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். எழுத்து முயற்சியில் எப்போதும் உடனிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் நன்றிகள். பல சமயங்களில் நன்றியுடனும் சில சமயங்களில் நறநறப்புடனும் நான் ஆயுர்வேதம் படிக்க காரணம் நீதான் என அம்மாவிடம் சொல்வேன். அவருக்கு என் வணக்கம். அத்தனை எளிதில் என்னுடைய நேரத்தை எனக்கு விட்டுக்கொடுக்காத சுதீருக்கும் சபர்மதிக்கும் முத்தங்கள். நண்பர் ஜீவ கரிகாலன் நச்சரிக்கவில்லை என்றால் இது நூலாகியிருக்காது. 'யாவரும்' நண்பர்களுக்கு நன்றி. 


வழமையான மருத்துவ ஆலோசனைகள், எளிய மூலிகை மருந்து பிரயோகங்கள் போன்றவை அற்ற நூலாக ஆயுர்வேதத்தை பற்றி தமிழில் எழுத அனேக விஷயங்கள் உண்டு. இந்நூல் அப்படியான ஒரு முயற்சியே. மாதகணக்கில் மூல பிரதிகளை வாசித்து குறிப்புகள் எடுத்தேன். நீண்ட மேற்கோள்களை தமிழாக்கம் செய்தேன். பல ஆய்வு கட்டுரைகளை வாசித்து சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது.  இந்திய மருத்துவமுறைகள் குறித்து புரிந்துகொள்ள உண்மையில் ஐரோப்பிய அறிஞர்களையே சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. டொமினிக் உஜாஸ்டிக், டாக்மர் உஜாஸ்டிக், முள்ளன்பால்ட், டேவிட் கோர்டன் வைட், கென்னெத் ஜிஸ்க், ரிச்சர்ட் வெய்ஸ், ராச்சல் பெர்கர், ஃபிரான்சிஸ் ஜிம்மர்மேன், அரியான் ரோசு போன்ற ஆய்வாளர்களுக்கு உண்மையில் நான் கடன் பட்டிருக்கிறேன். காந்தியை, இந்தியாவை, இந்திய வரலாறை நாம் ஐரோப்பாவின் கண்களிலேயே அறிந்து கொள்கிறோம். கோயம்பத்தூர் ஆர்ய வைத்திய பார்மசி நவீன ஆயுர்வேத ஆய்வுகளுக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அவர்களுடைய ‘Ancient science of Life’ இந்திய மருத்துவ வரலாறு சார்ந்து மிக முக்கியமான சர்வதேச தரம் மிக்க ஆய்வுகளை தொடர்ந்து பதிப்பித்து வந்தது. அது நின்று போய் விட்டது வருத்ததுற்குரிய செய்தி. லண்டனின் வெல்கம் இன்ஸ்டிட்யுட் உலகளவில் மருத்துவ வரலாறைப் பற்றி பல முக்கியமான ஆய்வுகளை நூலாக்கி தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. இந்த நூல் மூன்று நான்கு வருட தொடர் வாசிப்பின் விளைவு. இவை நானே செய்த ஆய்வுகள் அல்ல. ஒருவகை சிந்தனை தொகுப்பு, உரையாடல். நான் வாசித்தவற்றைக்  கொண்டு சில இடைவெளிகளை நிரப்பி இருக்கிறேன், ஊகங்களை முன்வைத்திருக்கிறேன், அவதானங்களையும் சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கிறேன். 


‘ஆயுர்வேதம் மாறாதது’ என்றே ஆயுர்வேத அடிப்படைவாதிகளும், ஆயுர்வேதத்தை புறந்தள்ளும் நவீன அறிவியல் அடிப்படைவாதிகளும் ஒரே குரலில் இதே கருத்தையே வலியுறுத்துகிறார்கள். இக்கூற்று உண்மையா? என ஆராய துவங்கியதே இந்நூலின் துவக்கம். ஒரு உயிருள்ள மருத்துவ மரபின் இயல்பான வளர்ச்சியையும், நிகழ்கால சிடுக்குகளையும் பேசுகிறது. ஒரு ஆயுர்வேத மாணவனாக, மருத்துவனாக இந்நூல் எனக்கு பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது நான் ஒரு பண்பாட்டு தொடர்ச்சியின் முனையில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீளும் மரபு இது. எனது முன்னோர்கள் விட்டு சென்ற வாழ்க்கை பற்றிய அவதானிப்புகள், புரிதல்கள், அவர்கள் எதிர்கொண்ட இடர்கள், அதற்கு அவர்கள் கண்டடைந்த தீர்வுகள் என எல்லாமும் என்னை வந்தடைந்திருக்கிறது. இந்த அறிவு களனில் என் பங்கிற்கு எதையாவது சேர்க்க வேண்டும். சேர்த்த பின்னர் அதை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும். அதுவே என் கடமை. இந்நூல் அத்தகைய என் கடனை நிறைவு செய்வதற்கான ஒரு சிற்றடி அவ்வளவே.

-சுனில் கிருஷ்ணன் 

காரைக்குடி 

4, 7 ஆவது வீதி, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், காரைக்குடி – 2

drsuneelkrishnan@gmail.com









No comments:

Post a Comment