Thursday, July 23, 2020

காதுகள்- எம்.வி. வெங்கட்ராம் - வாசிப்பு குறிப்பு

எம். வி. வியின் வாழ்க்கை சித்திரத்தை பற்றி ஜெயமோகனின் 'அறம்' கதை வழியாக முதன்முறையாக பரிச்சயம் செய்து கொண்டேன். நித்ய கன்னி நாவலை சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். 'காதுகள்' எழுபது வயதிற்கு மேல் அவர் எழுதிய நாவல். அவருக்கு சாகித்திய அகாதமி விருதை பெற்றுக்கொடுத்த நாவலும் இதுவே. பசித்த மானிடம் முடித்த கையுடன் காதுகள் வாசிக்க தொடங்கினேன். இதுவும் கும்பகோணத்தை களமாக கொண்ட நாவல் தான். இப்போது இதை முடித்துவிட்டு மோக முள் தொடங்கியிருக்கிறேன். 'காதுகள்' குறித்து முன்னர் இரண்டொரு வாசிப்பனுபவங்கள் வாசித்தது நினைவில் இருக்கிறது. அது அளித்த அச்சத்தின் காரணமாகவே வாசிப்பதை தவிர்த்தும் தள்ளிப்போட்டும் வந்தேன்.

மகாலிங்கம் என்கிற மாலியின் உள்ளே நிகழும் சமர் தான் நாவல். மாலியின் உடலே சமர் களமாக ஆகி விடுகிறது. பிரபஞ்சன் அவருடைய முன்னுரையில் 'எம்.வி.வியின் உடல் ஒரு குருக்ஷேத்திரமாக வடிவமைக்கப்படுகிறது' என எழுதுகிறார். எம்.வி.வியே குறிப்பிடுவது போல் இது ஒரு தன்வரலாற்று நாவல். இப்படி ஒரு நாவலை எழுத அபார மன திண்மையும் தன்னுணர்வும் வேண்டும். மெல்லிய புகைச் சங்கிலிக்கு அப்பால் நின்று தனது பித்து நிலையை சாடசியாக  நோக்குவது, அதுவும் பல வருடங்கள் தொடர்ச்சியாக உள்ளுக்குள் பித்துநிலை நுரைத்து கொண்டிருந்தாலும், வெளியே இயல்பு வாழ்க்கை வாழ்ந்து புத்தகங்களும் கதைகளும் எழுதி பிள்ளைகளை வளர்த்தபடி இருப்பது என்பதை கற்பனை செய்வது கூட சாத்தியமில்லை. 

இந்திய மெய்யியல் மொழியில் சொல்வது என்றால் தனது கனவு நிலையை விழிப்பு நிலையை சாட்சியாக கொண்டு காண்பது என்பது இலக்கியத்தில் அரிய சாதனை. கவிதைகளின் இத்தெறிப்புகளை அவ்வப்போது காண முடியும். எல்லா பெருங்கவிகளும் ஓரிரு கவிதைகளிலாவது இப்படி வெளிப்படுவார்கள். பிரமிளின் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. உரைநடை இலக்கியத்தில் இத்தகைய பித்து வெளிப்படுவது வெகு அரிது என்றே எண்ணுகிறேன். புயலிலே ஒரு தோனியில் வரும் மதுக்கூட உரையாடல், ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் இறுதியில் வரும் அபத்த நாடகம், மற்றும் வெண்முரசின் சில பகுதிகள், விஷ்ணுபுரத்திலும் உண்டு,   ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் சில பகுதிகள், எனது நீலகண்டம் நாவலின் சில பகுதிகள் ஆகியவை இவ்வகையான எழுத்து தன்மையை கொண்டவை என சட்டென நினைவில் எழுகின்றன..  ஆனால் மேற்சொன்ன இவை எவையும் ஒரு முழு நாவலாக கனவு நிலையை விரித்து எடுப்பவை அல்ல. அவ்வகையில் 'காதுகள்' ஒரு முதன்மையான மற்றும் அபூர்வமான ஆக்கம்.  

நவீன உளவியல் கோணத்தில் நோக்கினால் உளச் சிதைவு எனும் ஸ்கீசோப்ரினியாவின் இலக்கியப் பதிவு என சொல்லலாம். தாந்த்ரீகத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் இது ஒரு குண்டலினி கோளாறின் முதன்மை பதிவு என சொல்லக்கூடும். ஒரு உளவியல் நிபுணரை சந்தித்து மாத்திரையை விழுங்கி இருந்தால் சரியாகியிருக்கக்கூடிய நிலையாக இருக்கலாம். அல்லது மாந்த்ரீகத்தின் உதவியை நாடியிருந்தாலும் விடிவு பிறந்திருக்கலாம். ஆனால் மாலி இரண்டையும் நாடவில்லை. முன்னதை காசில்லாமல் தவிர்க்கிறான். பின்னதை கர்ம வினையை அனுபவித்து கடக்க வேண்டும், அவனுடைய ஆதி குருவான முருகப் பெருமான் அவனுக்கு வைக்கும் சோதனை என்பதால் அவன் அருளாலேயே கடக்க வேண்டும் என விடாமல் அவனை பற்றிக் கொள்வதால் தவிர்க்கிறான். 

மாலி ஒரு உள்ளொடுங்கிய ஆளுமையாகவே அறிமுகம் ஆகிறான். சுருக்கமாக அவனுடைய வாழ்க்கை கதை சொல்லப்படுகிறது. தந்தை வளர்த்தெடுத்த தொழில் அவருக்கு பின் நசிவடைகிறது. திருமண உறவிலும் பிரிவு ஏற்படுகிறது. பின்னர் மீண்டும் இனைந்து வாழ்கிறார்கள். ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது. ஒரு கருவை வலுக்கட்டாயமாக கலைத்து கொள்கிறாள். தொழில் நொடிந்து வறுமையில் உழல்கிறார்கள். எழுத்தாளனாக ஓரளவு நிலைபெருகிறான். ஆனாலும் வறுமையில் இருந்து விடிவு இல்லை. எம்.வி.வி வறுமையை பற்றி எழுதும் சித்திரம் நம்மை  வதைக்கிறது. ஒருவேளை சோற்றுக்கு  என்ன செய்வதன்று தெரியாமல் அலையும் வறுமை. ஒவ்வொன்றையும் விற்று காசாக்கி அடுத்தவேளைக்கு உண்கிறார்கள். இறந்து பிறக்கும் குழந்தையை அடக்கம் செய்ய காசு இல்லை. வெட்டியான் அதிகம் கேட்கிறான் என ரத்தம் தோய்ந்த துணி சுருளை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டு தன்வீட்டு தோட்டத்தின் பின்புறமே குழி வெட்டி புதைக்கிறார். உணர்வு ரீதியாக தொந்தரவு செய்யும் இப்பகுதியும் கூட மனவிலக்கத்துடன் எழுதப்படுகிறது. நாவலின் இறுதி பகுதி, மகள் சாகக் கிடக்கையில் மருத்துவரை அழைத்து வரச் செல்லும் பகுதி கதைகூறு முறையில் ஒரு உச்சம். 

நாவலை மறைஞான பிரதியாக அணுகலாம். மாலி திட்டமிடாமல் அதன் போக்கில் யையும் போது பெரும் செல்வந்தனாக ஆகிறான். அவனாக யோசித்து நடக்க தொடங்கியது முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. பெரும் துயரங்களில் உள்ளம் வதந்கிவிடும்போது அவனுடடைய பிரமைகள் நின்றுவிடுகின்றன. அவ்வழியை போக்கும்/ நீக்கும் பிரமைகள் எதுவும் வருவதில்லை. அதை முழுமையாக அனுபவிக்கிறான். இரண்டு நாடக பகுதிகள் நாவலில் உள்ளன. மாலியின் மீது மையல் கொண்டதாக அறிவித்துக்கொள்ளும் நாசகாளிக்கும் அவளுடைய கணவன் என கூறிக்கொள்ளும் கறுப்பனுக்கும் இடையிலான உரையாடல் ஒன்று.  இருவரும் இரண்டு காதுகளில் இருந்து பேசிக் கொள்கிறார்கள். நாசகாளியை துரத்த கருப்பனை துணைக்கொண்டு வில்லேந்தி வரும் ராமனுக்கும் கறுப்பனுக்கும் இடையிலான உரையாடல். உதடுகளில் ராமன் வில்லுடன் நாசகாளி தப்பாமல் இருக்க காவல் காக்கிறான். கறுப்பன் மேல் அன்னத்தில் ஒவ்வொரு பல்லிடுக்காக தட்டித்தட்டி காளியை தேடுகிறான். மாறி மாறி இவர்கள் இருவரும் உரையாடுகிறார்கள். புதிய வருமான சாத்தியம் ஒன்று அப்போது தோன்றி மாலியால் எதிர்கொள்ள முடியாமல் விரயமாகிறது. மாலி ஒரு விராட வடிவனாகிறான். அவனுடைய வெவ்வேறு பகுதியில் இருந்து மனிதர்கள் எழுந்து வந்தபடி இருக்கிறார்கள்.  'அவனுடைய உடல் ரோமக்கால் ஒவ்வொன்றிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்,பலவகை உயிர் இனங்களும் தோன்றித் தங்கள் பிரச்சனைகளை எல்லாம் இப்போதே பேசித் தீர்த்துக்கொள்ள முடிவு செய்துவிட்டாற்போல் இருந்தது.' என எழுதுகிறார். அல்லும்பகலும் அவன் விழி திரைக்கு முன் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் காம காட்சிகளாக கொந்தளிக்கின்றன. பூங்கா  பெஞ்சில் அவனுக்கு ஸ்கலிதம் ஏற்படுகிறது இந்த பிரமை காட்சிகளினால். இத்தனை தீவிரமான கொந்தளிப்புகளை வெளியே நின்று எழுதுவதால் இயல்பாக ஒரு எள்ளல் தோணி வந்துவிடுகிறது. அதுவே வாசகரை பைத்தியமாக்காமல் காக்கிறது என தோன்றுகிறது. பல இடங்கள் தன்னிச்சையாக கூர்மையான பகடி வெளிப்படுகிறது. அதுவும் இருண்ட நகைச்சுவை பகுதிகள். உதாரணமாக மாலியின் மகள் இறந்துவிட்டதாக சித்தரிக்கும் பிரமையில் ஒப்பாரி பாடல்கள் ஒலிக்கின்றன. மாலி நடுங்கிக் கொண்டிருக்கிறான். அதன் முடிவில் ஒரு குரல் சொல்கிறது. 'பாட்டு அருமை எல்லாரும் கைத்தட்டுங்க'. கந்தர் அனுபூதியை சொல்லிக்கொண்டே பிரமையை கடக்க முற்படுகிறான். அப்போது ஒரு குரல் 'இலக்கண பிழைகள் மலிந்த நூல். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இருபத்தியாறு பிழைகள் புலப்பட்டுள்ளன. மேலும் ஆய்வு செய்து..' என சொல்கிறது. குறிப்பாக இந்நாவல் கைகொள்ளும் வேதாந்த தரிசனத்தின் மீதே அந்த பகடி திரும்புகிறது. பற்களை தட்டும் கறுப்பன் அகம் பிரம்மாஸ்மி எனும் மந்திர உபதேசத்தை ஏற்று அதை சொல்லிக்கொண்டே மாலியின் உடலுக்குள் மறைந்திருக்கும் அவனுடைய மனைவியை தேடுகிறான். புராண, வேதாந்த படிமங்கள், சொற் சேகரங்கள் என யாவும் தலைகீழாகி உள்ளன. அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸ் ஒரு நேர்காணலில், யதார்த்தத்தை எத்தனை நுணுக்கமாக பதிவு செய்கிறோமோ அத்தனைக்கு அத்தனை அது அபத்தமாக மாறும் என்கிறார். ஒருவனின் அகவெளி நிகழ்வுகளை நெருக்கமாக உண்மையாக அப்பட்டமாக பதிவு செய்தாலே அது இயல்பாக அபத்தத்தன்மையை அடைகிறது. நாவலின் வழியாக எம்.வி.வி சென்றடையும் தரிசனம் அத்வைத வேதாந்தம் தான். 'இந்த வாழ்க்கையே ஒரு பிரமை தானே? இந்த பிரமைக்குள் எத்தனை பிரமைகள்? என புரிந்துகொள்கிறார். நாவலின் இறுதியில் மாலியின் முருக பக்தியும் கூட ஒரு பிரமையாக ஆகிவிடுகிறது. 'சத்தத்தை ஒடுக்க அதைவிட பெரிய சத்தம் போட வேண்டும். கொல்லவரும் சொல்லை அதைவிட வலிய சொல்லால் அடித்துக் கொல்லவேண்டும். ஒரு hallucination ஐ மாய்க்க அதைவிட பெரிய hallucination தேவை. மாயை என்னும் தோற்றத்தைக் கடக்க அதைவிட பெரிய தோற்றம் தேவை என்ற தெளிவு இவனுக்கு இப்போது உண்டாகியுள்ளது.' எனும் தரிசனத்துடன் முடிவடைகிறது. தன்னிலை படர்கை என இரண்டாக பிரிந்த கதைசொல்லிகள் இறுதியில் ஒருவரே என உணர்த்துவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. ஒருவன் இருவனாக, பலவாக சிதையும் புள்ளியில் தொடங்கி அனைவரும் ஒருவரே எனும் புள்ளியில் முடிகிறது. 



'காதுகள்' எனக்கு இரண்டு வேறு ஆக்கங்களை நினைவுறுத்தியது. ஒன்று புல்ககோவின் மாஸ்டர் அண்ட் மார்கரீட்டா. அதின் சிலபகுதிகள் இப்படியான அச்சுறுத்தும் அபத்தமும் இருண்ட நகைச்சுவையும் கொண்டவை. மற்றொன்று பெசொவாவின் புக் ஆப் டிஸ்குயட். பெசொவா பலவாக, கிட்டத்தட்ட இருபது கதைசொல்லிகளாக தன்னை பகுத்துக்கொண்டவர். அவை வெறும் புனைபெயர்கள் அல்ல புனைவு ஆளுமைகள். ஒருவகையில் எழுத்தாளர் அனைவருமே பிளவாளுமை கொண்டவர்கள் தான். அந்த பிளவு தான் ஒரு வகையில் படைப்பிற்கான உந்துசக்தியாகவும் இடுபொருளாகவும் இருக்கிறது. தன்னை கூறு போட்டு தான் எழுத்தாளர் இங்கே வாழ முடியும். எம்.வி.வியிடம் வேறொரு பரிணாமத்தில், வேறொரு எல்லையில் வெளிப்படுகிறது. அகக் கதை அளவிற்கு புறக் கதை இல்லை என்பதால் நாவல் வடிவ ரீதியாக சமன்கொள்ள வில்லை என வேண்டுமானால் ஒரு விமர்சனத்தை வைக்கலாம். மேலும் மிகவும் அப்பட்டமாக நுண்மை ஏதுமின்றி அக  அனுபவங்களை சொல்கிறது. என குறை சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இந்த நாவலின் அசல் தன்மைக்கு முன் பொருள் அற்றவை. வாசிக்க தொடங்கி முடித்த இரண்டு இரவுகளிலும் அகம் அதிர்ந்தபடி தான் இருக்கிறது. 

 'காதுகள்'  ஒரு போராட்ட வாழ்க்கையை பதிவு செய்யும் நாவல் தான். தனிமனிதன் தனக்குள்ளாக தனக்கு எதிராக தன்னை திரட்டி தனது போதத்தை தக்க வைக்கவும் மீட்கவும் நடத்திய போராட்டத்தின் கதை. முடைநாற்றம் எடுக்கும் கழிவுநீர் கால்வாயை பொறுமையாக ஆராய்ந்து நோக்குவதற்கு பெரும் மனத் திடம் வேண்டும். எம்.வி.வியின்  தீரத்திற்கு என் வணக்கங்கள். அவர் க=1920 ஆம் ஆண்டு பிறந்ததாக புத்தக குறிப்பு சொல்கிறது. எனில் இது அவருடைய நூற்றாண்டு. இருநூறு புத்தகங்கள் எழுதியதாக சொல்கிறார். இந்த தருணத்தில் அவருக்கு உரிய கவனமும் மரியாதையும் கிடைக்க வேண்டும். அவருடைய பிற நூல்களை கண்டுபிடித்து அச்சேற்ற வேண்டும். குறைந்தது கிண்டில் நூலாகவாவது கொண்டு வர வேண்டும்.  

காதுகள் 
எம்.வி.வெங்கட்ராம்
காலச்சுவடு 




  

2 comments:

  1. இந்தப் பதிவைப் படித்ததில் மகிழ்ச்சி. ஆனால் ஒரே ஒரு வருத்தம். பல இடங்களில் ஒற்றுப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன.

    ReplyDelete