Thursday, July 9, 2020

யாரும் யாருடனும் இல்லை- உமா மகேஸ்வரி - நாவல் குறிப்பு

லாவண்யா சுந்தர்ராஜன் உமா மகேஸ்வரிக்கு சிற்றில் சார்பாக ஒருநாள் அரங்கு ஏற்பாடு செய்யவேண்டும் என ஒருமுறை சொல்லியிருந்தார். அவருடைய மரப்பாச்சி சிறுகதையை எங்கள் கூடுகையில் (தற்செயலாக எங்கள் இலக்கிய அமைப்பின் பேரும் மரப்பாச்சி தான்) விவாதித்திருந்தோம். தமிழினி வெளியீடாக வெளிவந்த இந்நாவலை வாசித்து முடித்தேன்.

நாவலின் களம் ஒரேயொரு வீடு. அந்த வீட்டிற்குள் வசிக்கும் மனிதர்களின் கதையை சொல்லி செல்கிறது. சிறிய கிராமத்தில் சகல வசதிகள் கொண்ட மாடி வீட்டை பொன்னையா எழுப்புவதும், அதன் பெருமிதத்தையும் முதல் சில அத்தியாங்களில் சொல்லும் நாவல் இறுதியில் அவ்வீட்டு சுவர்களுக்குள்ளாக எல்லை வகுத்து கொண்டு சுருங்கி விடுவதுடன் முடிகிறது. தமிழ் பல்ப் நாவல்கள் பலவும் கூட்டுக் குடும்பத்தின் சிதைவை சித்தரித்துள்ளது. பொது புத்தியில் கூட்டு குடும்பம் மீது நமக்கு ரொமாண்டிக் சாய்வுகள் உண்டு. ஆனால் நமக்கு ரொமாண்டிக் சாய்வுகள் உள்ள பிறவற்றை போலவே இதையும் நடைமுறை படுத்த மாட்டோம். அவ்வப்போது குற்ற உணர்விற்கும் கழிவிரக்கத்திற்கும் உகந்த கருவியாகி விடும். பலப் நாவல்கள், திரைப்படங்கள் என அவற்றின் நோக்கம் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும், அதை நினைவேக்கத்துடன் போற்றுவதாகவுமே இருக்கும். அதன் உள்ளார்ந்த அதிகார உரசல்களை பேசுவதில்லை. மறுபக்கம் பிரசார எழுத்துக்கள் குடும்ப அமைப்பை வன்முறையின் ஊற்றுக்கண் என சித்தரித்து தனி மனிதனின் எல்லாவித சிக்கல்களுக்கும் குடும்ப அமைப்பின் மீது பழிபோடும். இவையிரண்டும் எழுதுவதற்கு சுலபமான கதைகள் தான். ஏனெனில் இவை ஒற்றைப்படையான அறுதி முடிவுகளை கொண்டிருப்பவை. கதையை இந்த முன்முடிவை உறுதிப்படுத்த பயன்படுத்துபவை. உமா மகேஸ்வரி இவ்விரண்டு எல்லைகளுக்கும் போகாமல், மிக இயல்பாக ஒரு கூட்டு குடும்பத்தின் சிதைவை, அதன் சிக்கல்களை, உள்ளார்ந்த வன்முறைகளை, சுரண்டல்களை மெல்ல மெல்ல கண்முன் நிகழ்த்தி காட்டுகிறார். இதை சமன்படுத்தும் நோக்கு குழந்தைகள் குடும்ப அமைப்பினுள் வளர்வதின் ஊடாக அடையும் நட்பு, அன்பு பாதுகாப்பு போன்றவையும் சித்தரிக்கப்படுகிறது. இந்த சமநிலையே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது.

நாவலின் மிகப்பெரிய பலம் அதன் மொழி. உமா மகேஸ்வரி கவிஞரும் கூட. குடும்ப அமைப்பின் உள்ளார்ந்த வன்முறையை வேறு வகையில் பேசும் யூமா வாசுகியின் ரத்த உறவுகள் வாசிக்கும் போது மனம் தொந்திரவுக்கு உள்ளாகும். இந்நாவலில் அவ்வகையிலான தொந்திரவு எதுவும் நமக்கு ஏற்படுவதில்லை. சிறு சிறு துண்டங்களாக நிகழ்வுகளையும் மன ஓட்டங்களையும் சொல்லி செல்கிறது. இரண்டு நாவல்களிலும் சிறார் பகுதிகள் முக்கியமானவை. ரத்த உறவுகளின் சிறார் பகுதி கனவுத்தன்மை கொண்டது. இந்நாவலில் நினைவேக்கத்தன்மை கொண்டது என கூறலாம். உயிர்ப்புடன் திகழ்வது.

நாவல் படர்கையில் சொல்லப்பட்டாலும் கூட அதிகமும் அணு எனும் சிறுமியின் கண்ணோட்டத்திலேயே விரிகிறது. அன்னம்மா மட்டுமே முழுக்க நேர்மறை சித்தரிப்பு கொண்டவர் என சொல்லிவிட முடியும். ராஜேஸ்வரி, தனமணி, வினோதினி, விஜயா, வாணி, குணா, கோபால், பொன்னையா, சுப்பக்கா என பிற அனைத்து பாத்திரங்களும் நேர்மறை எதிர்மறை இயல்புகளின் வெவ்வேறு கலவையில் உருவாகி உள்ளார்கள். குடும்ப தலைவர் பொன்னையா தனக்கென பெரும் வணிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கொள்கிறார். ஏழு பிள்ளைகளுக்கு தந்தையாகியும் பெண் தொடர்புகள் உடையவராக குடும்பத்திலிருந்து விலகியவராக வருகிறார். அவருடைய மகன்களில் குனாவைத்தவிர வேறு எவரும் பெரிய ஆளுமையாக உருவாகி வரவில்லை நாவலில். எல்லோரும் சிடுசிடுக்கும் சாமானிய ஆண்களாகவே வருகிறார்கள். நகையை அடமானம் வைக்கும் குடிகார கணவன், காசு கேட்டு மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் மருமகன், வணிகத்திலே கவனம் கொண்டிருக்கும் மகன்கள் என ஆண் பாத்திரங்கள் எல்லாம் தட்டையான வார்ப்புகள். பொன்னையாவின் கடைசி மகனான குணா மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தொடக்கத்தில் அவனுடைய சித்தரிப்பும் கூட அறிந்த வார்ப்புருவை சேர்ந்ததாகவே இருந்தது. விநோதினியுடனான உறவின் வழியாக அவனுடைய பாத்திரம் சிடுக்கு நிறைந்ததாக துலக்கம் பெறுகிறது. ஆண் பாத்திரங்களை ஒப்பிடும்போது நாவலின் பெண் பாத்திரங்கள் சிடுக்கானவர்கள். உடற்குறை கொண்ட  சுப்பக்கா வன்புணர்வுக்கு உள்ளாகி தன்னை மாய்த்து கொள்கிறாள். மூத்த மருமகள் கடும் உழைப்பாளி, அதேநேரம் பிள்ளைகளிடம் வித்தியாசம் காணும் நுட்பமான இடம் நாவலில் பதிவாகிறது. தங்கையின் வயிற்றில் வளரும் கர்பத்தை கலைக்க உதவுகிறாள் ஆனால் அதன் பின் அவளை மன்னிக்கவே இல்லை. இளம் வயதில் திருமணம் முடித்து வரும் வினோதினி நாவலின் அபாரமாக உருவாகி வந்த பாத்திரம். எப்போதும் குடித்து வரும் கணவன், துளிர்விடும் புதிய உறவு, அதனால் ஏற்படும் சிக்கல்கள், உறவில் குற்ற உணர்வு இல்லாமை, உண்டான கருவை கலைத்த பிறகு அது தலைதூக்குவது, சிக்கும்போது அவனையே காரணமாக காட்டிக்கொடுத்து தப்பிக்க முயல்வது, பதின்ம வயது பெண் வழியாக தன்னுடைய வேட்கையை தீர்த்துக்கொள்ள முயல்வது, இறுதியாக சொத்தை பிரிக்க கோருவது என முழு பரிணாமமும் வெளிப்படும் பாத்திரம். படிப்பு நிறுத்தப்பட்டு திருமண உறவுக்குள் நுழையும் வாணியின் பாத்திரமும் ஓரளவு முழுமையாக துலங்கி வருகிறது. பதின்மத்திற்கே உரிய தயக்கங்கள், மயக்கங்கள், சிக்கல்கள் கள்ளத்தனங்கள் (குறிப்பாக பிள்ளைகளுடன் தனியாக விளையாடும் ஒரு சித்திரம் உண்டு. அத்தனை எளிதாக எவரும் துணிந்து எழுதி விட முடியாத பகுதி) என எல்லாமும் உண்டு. 

நாவலுடைய களம் நான்கு சுவற்றுக்குள் நிகழ்கிறது என்பதால் சற்றே நமக்கு மூச்சு திணறுகிறது. எனினும் கதை மாந்தர்கள் உணரும் அத்திணறலை வாசகராக நாமும் உணர வேண்டும் என்பதை நாவலாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். ஒரு குடும்பம் என்றால் நாம் எவற்றை எல்லாம் யோசிப்போம்? திருமணம், மரணம், தற்கொலை, உறவு சிக்கல், குடிகார கணவன், விட்டேந்தி கணவன், வேட்கை கொண்ட மனைவி, வெள்ளந்தி பிள்ளைகள் என இவையாவும் பிரதிநிதப்படுத்தபடுகிறது. இந்த தன்மையே இதன் பலமும் பலவீனமும் கூட. பள்ளிக்கு அழைத்து செல்லும் குதிரை வண்டி தாத்தாவை நிறுத்தி விட்டு வேன் வந்ததும் அவரை காண தேடிப்போவது, பொன்னையா இறந்ததும் முகம் காண வரும் பாருவை குடும்பம் அவமதித்து அனுப்புவது என தேய்வழக்கான சம்பவங்கள் நாவலை கீழே இழுக்கின்றன. வினோதினி - குணா உறவு நாவலின் உச்சம் நோக்கி போகும் பகுதி. ஆனால் அதற்கு பின் நாவலில் அதுவரை கட்டமைத்தவை எல்லாம் உருமாற போதிய அவகாசம் இல்லாமல்  அவசர கதியில் முடிவதாக தோன்றுகிறது.  

நாவலின் கதை போக்குடன் நாமறிந்த மனிதர்கலின் நிழல்கள் பிணைந்து கொள்கிறது. பொன்னையாவையும், அன்னம்மாவையும் விஜயாவையும், செல்வத்தையும் நாம் நம் சுற்றங்களில் அறிந்திருக்கிறோம். அவர்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். 'யாரும் யாருடனும் இல்லை' என்பது உண்மையில் ஒரு கூர்மையான வாக்கியம், உறவுகளை உற்று நோக்கி அதன் ஆடல்களை பரிசீலனை செய்து எழுத்தாளர் வந்தடையும் ஒரு வாக்கியம். எல்லோரும் எல்லோருடனும் இருப்பதாக பொய் தோற்றம் காட்டிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அதை மறுத்து இவ்வாக்கியத்தை சொல்கிறார். மறுபக்கம் இந்த வாக்கியத்தில் வருத்தமும் ஏக்கமும் கூட தொனிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் பார்வையிலிருந்து. ஒரு நவீனத்துவ மனநிலையில் நின்று 'யாரும் யாருடனும் இல்லை' என கறாராக எவ்வித உணர்வு பிணைப்பும் இன்றி கண்டடைந்ததை சொல்லும் தொனி, இது நவீன மனிதன் என்பவன் தனி மனிதனாக மட்டுமே இருக்க முடியும் என காம்யு போன்றவர்கள் வழியாக ஒலிக்கும் குரல், இலக்கியத்திற்கு உகந்ததும், இசைவானதும் கூட, உடனே எதிர் தரப்பாக உள்ளிருந்து ஒரு மரபான மனதின் ஏக்கமாகவும் வருத்தமாகவும் இரட்டை குரலில் தொனிக்கிறது. இந்த துல்லியமின்மை, இந்த ஊசலாட்டம் இதை தனித்துவமான நாவலாக்குகிறது.  

No comments:

Post a Comment